ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுத்துவிட்டு ரசீதை கீழே போடாதீர்கள்!... மிகவும் எச்சரிக்கை..

ஏ.டி.எம். மையத்தில் கிடந்த ரசீதை எடுத்து ஆன்லைன் மூலம் ரூ.48 ஆயிரத்து 781–க்கு பொருட்கள் வாங்கி மோசடியில் ஈடுபட்ட வாலிபரை மாவட்ட குற்றப்பிரிவு பொலிசார் கைது செய்தனர்.

ஆன்லைன் மூலம்...
சேலம் மாவட்டம் ஓமலூர் தொட்டியபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜன் (வயது 61). இவர் கடந்த மாதம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அமித்குமார் சிங்கிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில், ஓமலூரில் உள்ள ஒரு வங்கியில் கணக்கு வைத்துள்ளேன். எனது வங்கி கணக்கில் இருந்து ரூ.48 ஆயிரத்து 781 எடுக்கப்பட்டதாக செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்தது. இது தொடர்பாக வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது, ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்கியதாகவும், அதற்காக வங்கிக்கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.
ஆனால், நான் ஆன்லைன் மூலம் எந்த பொருட்களையும் வாங்கவில்லை. எனவே, ஆன்லைன் மூலம் நூதன முறையில் பணத்தை திருடியவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார். இந்த புகார் மனு மீது விசாரணை நடத்துமாறு மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணி, சப்–இன்ஸ்பெக்டர் உஷாராணி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
வாலிபர் கைது

விசாரணையில், ராஜன் கடந்த மாதம் ஓமலூர் பகுதியில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுத்து விட்டு, ரசீதை அங்கே போட்டு சென்றுள்ளார். அதை அவருக்கு பின்னால் நின்ற ஒருவர் எடுப்பது சி.சி.டி.வி. கேமராவில் முகம் பதிவாகி இருந்தது தெரியவந்தது. மேலும் அவர் அங்கு பணத்தை எடுத்துள்ளார். இதையடுத்து போலீசார் அந்த நபர் பயன்படுத்திய ஏ.டி.எம். கார்ட்டை கண்டறிந்து அதன் மூலம் பெயர் முகவரியை கண்டுபிடித்தனர்.

அதில் அவர், தொளசம்பட்டி அருகே உள்ள கோவிலூர் பகுதியை சேர்ந்த பெரியசாமி (30) என்பது தெரியவந்தது. இந்தநிலையில் நேற்று பெரியசாமியை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் உஷாராணி கைது செய்து விசாரணை நடத்தினார். இதில், ரசீதில் இருக்கும் நம்பர்களை தனது கூட்டாளியான மதுரையை சேர்ந்த ஆசாமி ஒருவருக்கு தெரிவித்தும், அதை வைத்து கணினி மூலம் ஆன்லைனில் பொருட்களை வாங்கி மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

Comments