இந்தியாவிலிருந்து இலங்கைக்கு புறப்பட்ட விமானத்தில் கோளாறு: 146 பயணிகள் வெளியேற்றம்

திருச்சி

இலங்கை விமானம் திருச்சியிலிருந்து புறப்படும் நேரத்தில், அதில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது தெரியவந்ததால், பயணம் ரத்துசெய்யப்பட்டு பயணிகள் மாற்று விமானத்தில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

திருச்சி-இலங்கை இடையே நாள்தோறும் இருவேளையும் ஸ்ரீலங்கன் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானம் சனிக்கிழமை காலை 9.25 மணிக்கு 146 பயணிகளுடன் இலங்கை புறப்படத்தயாரானது. அப்போது, விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருந்தது கண்டறியப்பட்டது. இதுகுறித்து கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் கொடுத்தார். பின்னர் பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டு அருகில் உள்ள ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர்.

இதையடுத்து, எலிவேட்டரில் ஏற்பட்ட கோளாறை சரி செய்யும் பணியில் இன்ஜினியர்கள் ஈடுபட்டனர். சரியான நேரத்தில் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மாலையில் கொழும்பு சென்ற மற்றொரு விமானத்தில் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

பிறகு, சனிக்கிழமை பிற்பகல் 2.30-க்கு வந்த ஸ்ரீலங்கன் விமானத்தில் பழுதான விமானத்துக்கான உதிரிபாகங்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் திருச்சி வந்தனர்.

இதையடுத்து, தனியார் விடுதியில் தங்கியிருந்த காலை பயணிகள், பிற்பகல் 3.30-க்கு இலங்கை செல்லும் பயணிகள் ஆகியோரில், இலங்கை வழியாக வெளிநாடுகளுக்கு மாற்று விமானத்தில் செல்லும் பயணிகளுக்கு முன்னுரிமை அளித்து சனிக்கிழமை பிற்பகல் சென்ற விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

மற்றவர்கள் விடுதியில் தங்கவைக்கப்பட்டு, பழுதான விமானம் சரியானதும் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Comments