மாயமான ஏ.என்-32 விமானத்தின் பாகங்களா? கடலில் மர்ம பொருள் கண்டுபிடிப்பு

ராணுவ விமானம் மாயமான, வங்க கடலில் 3½ கிலோ மீட்டர் ஆழத்தில் சந்தேகப்படும் மர்ம பொருள் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.

அதை ‘ரிமோட் ஆபரேட்டிங் வெகிகிள்’ என்ற நவீன கருவி மூலம் வெளியே எடுத்து ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.

சென்னை தாம்பரம் விமானப்படைத் தளத்தில் இருந்து 29 பேருடன் அந்தமான் தலைநகர் போர்ட்பிளேருக்கு கடந்த மாதம் 22-ம் திகதி காலை 8.30 மணிக்கு ஏ.என்-32 ரக ராணுவ சரக்கு விமானம் புறப்பட்டு சென்றது.

அந்த விமானம் அன்று பகல் 11.45 மணிக்கு போர்ட்பிளேருக்கு சென்று சேர்ந்திருக்கவேண்டும்.

ஆனால் அன்று காலை 9.12 மணிக்கு, விமானம் மாயமானதாக ரேடார் கருவியில் தகவல் பதிவானது.

இதுகுறித்து விமானப்படை அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில், கடந்த ஒரு மாதமாக ஆராய்ச்சிக்கப்பல்கள், போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்கள் மூலம் தேடும் பணி நடந்து வருகிறது.

இந்த நிலையில் விமானம் மாயமான இடத்தில் கடலுக்கு அடியில் சந்தேகப்படும் படியான மர்ம பொருள் ஒன்று கிடப்பது தெரிய வந்துள்ளது.

நவீன கருவி உதவியுடன் அந்த பொருளை எடுத்து ஆய்வு செய்யும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டு இருக்கிறது.

இதுபற்றி இந்திய கடலோர காவல் படை மற்றும் கடற்படை அதிகாரிகள் கூறியதாவது:-
வங்க கடலில் மாயமான ஏ.என்-32 ரக விமானம் விழுந்து இருக்கலாம் என்று கருதப்படும் இடத்தில் கடலாய்வு செய்யும் இந்திய கப்பலான சமுத்திர ரத்னாகர் மற்றும் ஆய்வு கப்பல் சாகர் நிதி மற்றும் 3 போர்க்கப்பல்கள், போர் விமானங்கள் மூலம் பழைய சம்பவங்களை ஒப்பிட்டு தீவிரமாக தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.

மாயமான விமானத்தை தேடும் இடம் பொருளாதார மண்டல பகுதியாக கருதப்படுகிறது.

விமானம் மாயமானதாக ரேடாரில் பதிவான இடம் சென்னை துறைமுகத்தில் இருந்து 150 நாட்டிக்கல் மைல் தூரத்தில் உள்ளது.

இந்தப்பகுதியில் கடலுக்கு அடியில் 3½ கிலோ மீட்டர் முதல் 5 கிலோ மீட்டர் ஆழம் வரை தீவிரமாக தேடும் பணி கடந்த ஒரு மாதமாக நடந்து வரு கிறது.

காலநிலை மாற்றத்தால் தேடும் பணியில் ஒரு சில நாட்கள் தொய்வு ஏற்பட்டது.

இந்த நிலையில் நடுக்கடலில் 16 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் தேடும் பணி நடந்து வருகிறது.

சமுத்திர ரத்னாகர் கப்பலில் ஆழ்கடலுக்குள் அதிர்வுகளை அனுப்பி எதிரொலிக்கும் சத்தத்தை துல்லியமாக கணிக்கும் கருவி மற்றும் கடலுக்கு அடியில் கிடக்கும் பொருட்களை ஆய்வு செய்யும் ‘ஸ்கேன் சோனார்’ உள்ளிட்ட பல்வேறு அதிநவீன கருவிகள் இருக்கின்றன. அவற்றின் உதவியுடன் தேடும் பணி நடக்கிறது.

இந்த கப்பல் மணிக்கு 3 முதல் 4 நாட்டிக்கல் மைல் வேகத்தில் இயக்கப்பட்டு தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.

சமுத்திர ரத்னாகர் கடலாய்வுக் கப்பலால் 5 கிலோ மீட்டர் ஆழம் வரை ஸ்கேன் செய்து பார்க்க முடியும்.

தற்போது 3½ கிலோ மீட்டர் ஆழத்தில் முதல் முதலாக விமானத்தின் ஒரு பாகம் போன்ற சந்தேகப்படும் ஒரு மர்ம பொருள் கிடப்பது தெரியவந்து இருக்கிறது.

இந்த மர்ம பொருள் மாயமான ஏ.என்-32 ரக விமானத்தின் பாகம் என்று கூறிவிட முடியாது. வேறு விமானங்களின் பாகமாக கூட இருக்க வாய்ப்பு உள்ளது.

அதனால் 8 பேர் கொண்ட குழுவினர் 4 ஆயிரத்து 500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு பகுதியில் மீண்டும் ஒருமுறை சோதனை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து ‘ரிமோட் ஆபரேட்டிங் வெகிகிள்’ என்ற அதிநவீன கருவியை கடலுக்கு அடியில் செலுத்தி, மர்ம பொருளை வெளியில் எடுத்து ஆய்வு செய்ய திட்டமிட்டு இருக்கிறோம்.

அதே நேரம் சாகர் நிதி கப்பலுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் தொடர்ந்து தேடும் பணி நடந்து வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Comments