குர்பான் விவகாரம் : முஸ்லிம் தலைமைகளின் நடவடிக்கை பாராட்டத்தக்கது – சிங்கள ராவய
முஸ்லிம்கள் தமது சமயக் கடமையான குர்பானை நாட்டின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக ஏனைய இனமக்களின் மனதைப் புண்படுத்தாதவாறு நிறைவேற்றிக் கொள்வதில் சிங்கள ராவயவுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.
முஸ்லிம் அரசியல் தலைவர்கள் நாட்டின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக குர்ஆன் கடமையை நிறைவேற்ற நடவடிக்கைகள் எடுத்திருப்பது பாராட்டத்தக்கது என சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் தெரிவித்தார்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையும் இது விடயத்தில் தலையிட்டு நாட்டின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக குர்பான் கடமை நிறைவேற்றப்படும் என அறிவித்துள்ளமையையும் அவர் சுட்டிக்காட்டினார்.
முஸ்லிம் அமைச்சர்களும் உலமா சபையும் குர்பான் கடமை தொடர்பில் தெரிவித்துள்ள கருத்துகளுக்கு பதிலளிக்கையிலே அவர் இவ்வாறு கூறினார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில் நாட்டில் இனங்களுக்கிடையில் முரண்பாடுகள் ஏற்படாத வகையில் நடவடிக்கைகளை முன்னெடுப்பது சமயத் தலைவர்களதும் அரசியல் தலைவர்களதும் கடமையாகும்.
முஸ்லிம்கள் தமது குர்பான் கடமையை சட்டங்களை மீறி பள்ளிவாசல்களிலும் வீடுகளிலும் மேற்கொண்டால் அது ஏனைய இனத்தவரின் உணர்வுகளைப் பாதிக்கும்.
இதனால் முறுகல் நிலை உருவாகலாம் என்றே சிங்கள ராவய சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி செயலாளர்களையும் ஆணையாளர்களையும் குர்பான் கடமையின் போது சட்டத்தை கடுமையாக அமுல்படுத்தும்படி வேண்டுகோள் விடுத்திருந்தது என்றார். (விடிவெள்ளி)

Comments
Post a Comment