நல்லிணக்கத்திற்கு உண்மைகள் கண்டறியப்படுவது அவசியம் -ரவுப் ஹக்கீம்

நாட்டில் உண்மையானதும், உறுதியானதுமான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு உண்மைகள் கண்டறியப்படவேண்டியது முக்கியமானது விடயமாகும். அதற்கான முதல் அடித்தளத்தை நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது.

காணாமல் போன ஆட்கள் குறித்து ஆராய்வதற்கான அலுவலகம் அமைக்கும் சட்டமூலமானது நல்லிணக்கத்திற்கான ஆரம்பமாகும். என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் தெரிவித்தார்.

அம்பாறை- கல்முனை பிரதான நீர் குழாய் மற்றும் கல்முனை நீர் உந்தும் நிலையம் என்பன வைபவ ரீதியாக திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று(13) தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் கிழக்கு மாகாண பிரதி பொதுமுகாமையாளர் எஸ்.ஏ. றசீட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையிலே- எந்தவொரு நல்லிணக்க நடவடிக்கைகளும் உண்மையில் அடிப்படையிலானதாக அமைய வேண்டும். அப்போதுதான் இந்த நடவடிக்கைகள் வெற்றி பெறாது.

கடந்த பயங்கரவாத காலங்களில் அனைத்து இனங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் காணாமல் யோயுள்ளனர். வெள்ளை வேன்களில் கடத்தப்பட்டுள்ளார்.

1980களில் தென்பகுதிகளில் ஜே.வி.பியின் கிளர்ச்சியின் போது ஆயிரக்கணக்கான இளைஞர்கள் காணாமல் போனதுடன் படுகொலையும் செய்யப்பட்டனர். இதற்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு சென்று போராடியவர்கள் இன்று காணாமல் போனோர் அலுவலகத்தை எதிர்ப்பது சுயநல அரசியலுக்கான செயற்பாடாகும்.

என்னைப் பொறுத்தமட்டில் சர்வதேச சமூகத்திற்கு முன்னால் புதிய நல்லாட்சி அரசாங்கம் உளப்புர்வமான சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். முக்கியமாக நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஒழிவு மறைவு இல்லாத வெளிப்படைத்தன்னையான சட்டத்தின் ஆட்சி நாட்டில் வேண்டும். இந்த வெளிப்படைத்தன்னையான சட்டத்தின் ஆட்சி நாட்டில் ஏற்படுமானால் நாடு சுவிட்சம் அடையும்.

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரஸூம் ஒரு இணக்கப்பாட்டுடன் பல விசயங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது. இணக்கப்பாடு சம்பந்தமாக நாங்கள் பாராளுமன்றத்திலும், வெளியிலும் பேசிக் கொண்டிருக்கின்றோம். பல விடயங்கள் விட்டுக்கொடுப்புடன் செய்ய வேண்டும். என்று எதிர்பாக்கப்படுகின்ற போது அதனை குழப்பும் நோக்கில் ஒருசிலர் அரசியல் சித்துவிளையாட்டுக்களை செய்யப்பார்க்கின்றார்கள்.

எனவே, நாட்டில் வாழும் அனைத்து இனமக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய நிரந்தரத் அரசியல் தீர்வினை அடைந்து கொள்வதற்கான காலம் கனிந்துள்ளது. இவற்றை அடைந்து கொள்வதற்கு நாம் இறைவனைப் பிரார்த்திக்க வேண்டும்.

இந்நீர் வழங்கல் திட்டத்திற்கென நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சு 2525 மில்லியன் ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளதுடன், இதன்மூலம் நாளொன்றிற்கு 9000 கனமீற்றர் நீர் சுத்திகரிக்கப்பட்டு அம்பாறை மாவட்டத்திலுள்ள சம்மாந்துறை, மாவடிப்பள்ளி, சாய்ந்தமருது, கல்முனை, நற்பிட்டிமுனை மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள துறைநீலாவணை மற்றும் கல்லாறு பிரதேசங்களில் வாழும் சுமார் 76276 குடும்பங்களுக்கு 24 மணி நேரமும் தொடர்ச்சியாக குடிநீரை வழங்கக்கூடியதாகவுள்ளது.

இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான அப்துல் ரஸாக் ஜவாத், ஆரிப் சம்சுதீன், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர்கள், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் உயர் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்கள்.

Comments