.குறைந்த வெட்டுப்புள்ளியில் பல்கலை நுழைய நுவரெலியாவில் போலி முகவரியுடன் பரீட்சை எழுதிய மாணவர்கள்

தற்போது நடைபெற்று வரும் கல்விப் பொதுத்தராதர உயர் தரப்பரீட்சைக்கு, நுவரெலியா மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில் வெளிமாவட்டத்தைச் சேர்ந்த 305 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியுள்ளதாகவும் விசாரணைகள் தொடருமாயின் இத்தொகை 500-யை தாண்டும் என்றும் நுவரெலியா வலயக்கல்விப் பணிப்பாளர் அமரசிறி பியதாச, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவுக்கு, நேற்றுத் திங்கட்கிழமை (22) அறிவித்துள்ளார்.

முதலைமைச்சர் சரத் ஏக்கநாயக்க மற்றும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.பியதாச தலைமையில், மாவட்ட செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவினர் நேற்றுச் சந்தித்திருந்தனர். வெளிமாவட்டங்களிலிருந்து நுவரெலியா மாவட்டத்துக்குட்பட்ட பாடசாலைகளில் பரீட்சை எழுதிய மாணவர்களின் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளதாகவும் சுமார் 27 பாடசாலைகளில் இவர்கள் பரீட்சைக்குத் தோற்றியுள்ளதாகவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக வலயக்கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார்.

 மேலும், பரீட்சை நிறைவடைந்தவுடன் மேலும் பல மாணவர்களது விவரங்கள் தெரியவரும் என்றும் அவர் தெரிவித்தார். 'நுவரெலியாவில் வதிவிடம் கொண்டவர்கள் என்ற போலிப் பத்திரங்களைக்கொண்டு, வெளிமாவட்டத்திலுள்ள தனியார் பரீட்சார்த்திகளும் இம்முறை பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர்.

இவ்வாறு பரீட்சைக்குத் தோற்றியுள்ள மாணவர்களுக்கான பல்கலைக்கழக வாய்ப்பு வழங்கப்படாது' என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

Comments