கொரியா பிரதிநிதிகள் கல்முனை மாநகர சபை – வைத்தியசாலை என்பவற்றுக்கு விஜயம்!
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள கொரிய நாட்டின் கொய்க்கா செயற்றிட்ட பிரதிநிதிகளும் ஆசியா மன்றத்தின் உயர் அதிகாரிகளும் கல்முனை மாநகர சபைக்கு வருகை தந்து. ஆணையாளர் மற்றும் உத்தியோகத்தர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
மாநகர ஆணையாளர் ஜே.லியாக்கத் அலி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆசியா மன்றத்தின் கொரிய நாட்டுக்கான வதிவிட பிரதிநிதி டிலான் டேவிஸ், இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி திருமதி.தினேஷா டி சில்வா, பணிப்பாளர் கோப குமார் தம்பி, நிகழ்ச்சித் திட்ட ஆலோசகர்களான எம்.ஐ.எம்.வலீத், சி.சசிதரன், மாநகர சபையின் பொறியியலாளர் ரி.சர்வானந்தன், கணக்காளர் ஏ.எச்.தஸ்தீக், நிர்வாக உத்தியோகத்தர் ஏ.எம்.ஆரிப், உள்ளூராட்சி உத்தியோகத்தர் சர்ஜுன் தாரிக் அலி உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது ஆசிய மன்றம் மற்றும் கொய்க்கா செயற்றிட்டம் என்பவற்றின் அனுசரணையுடன் கடந்த காலங்களில் மாநகர சபையினால் மேற்கொள்ளப்பட்ட வேலைத் திட்டங்கள், அவற்றின் பயனாக ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் உள்ளிட்ட முக்கிய பல விடயங்கள் குறித்து ஆணையாளர் விபரித்துக் கூறினார். நிகழ்வின் இறுதியில் இவர்களின் விஜயத்தை கௌரவித்து பரிசுப்பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வைத் தொடர்ந்து அக்குழுவினர் ஆசியா மன்றத்தின் கொய்க்கா செயற்றிட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட ஐக்கிய சதுக்கம் பகுதிக்கு சென்று விளையாட்டு மைதான பார்வையாளர் அரங்கு, அமானா வங்கி என்பவற்றை பார்வையிட்டனர்.
இக்குழுவினர் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கும் விஜயம் செய்து வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஆர்.முரளிஸ்வரன் அவர்களுடன் கலந்துரையாடியதுடன் வைத்தியசாலையின் முக்கிய பிரிவுகளை பார்வையிட்டு, அவற்றின் சேவைகள், அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், பெளதீக ஆளணி வளங்கள் போன்றவை குறித்து கேட்டறிந்து கொண்டனர். இதன்போது இவர்களுக்கு வைத்திய அத்தியட்சகர் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவித்தார்.


Comments
Post a Comment