கல்முனை பஸ் நிலையம்: நிசாம் காரியப்பரிடம் உலமாக் கட்சி கேள்வி

கல்முனை தனியார் பஸ் நிலையத்துக்குரிய இடத்தை கல்முனை மாநகர மேயர் தனியார் வங்கி ஒன்றுக்கு முறைப்படி வழங்கப்பட்டதா என்பது பற்றிய கணக்கு விபரங்கள் அடங்கிய தகவல்களை தரும்படி உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீதினால் கல்முனை மாநகர ஆணையாளருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

கல்முனை நகர மத்தியில் பன்னெடுங்காலமாக இருந்த பஸ் நிலையம் தனியார் பஸ் நிலையமாக பாவிக்கப்பட்டு வந்ததை தாங்கள் அறிவீர்கள். ஆனால் கடந்த கல்முனை மாநகர சபை மேயரால் மேற்படி பஸ் நிலையம் தனியார் வங்கி ஒன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தனியார் பஸ்களுக்கு மட்டுமல்ல கல்முனைக்கு வரும் பிரயாணிகளுக்கும் பல அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை தாங்கள் அறிவீர்கள்.
இந்த வகையில் மேற்படி பொது இடம் தனியார் வங்கிக்கு முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் கல்முனை மாநகர மேயரினால் விடப்பட்டுள்ளதானது சரியான முறைப்படி பகிரங்க அறிவித்தல் விடுக்கப்பட்டு முறைப்படி வழங்கப்பட்டதா என்பதையும் இதன் மூலம் மாநகர சபைக்கான வருமானம் எவ்வளவு? அது எந்தக்கணக்கில் இடப்பட்டுள்ளது என்பதையும் தகவல் அறியும் சட்டத்தின் பிரகாரம் உலமா கட்சி தங்களிடம் விளவுகின்றது. அத்துடன் இவற்றை நேரடியாக பார்வையிட எமது கட்சிக்கு நேரம் ஒதுக்கித் தருமாறும் கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

Comments