முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கு ஒரு பாமரனின் வேண்டுகோள்!!

சபூர் ஆதம்

இன்று இடைக்கால நிருவாகக் கட்டமைப்பை ஏற்படுத்துவது என்பதில் அரசும் தமிழ் தலைவர்களும் ஏறத்தாழ ஒரு பொது உடன்பாட்டிற்கும் புரிந்துணர்விற்கும் வந்துவிட்டனர் போலவே தென்படுகிறது. ஆயினும் இவ்விடைக்கால நிருவாகக் கட்டமைப்பில் வடக்குக் கிழக்கில் வாழும் முஸ்லிம்களையும் சிங்களவர்களையும் எவ்வாறு உள்ளடக்குவது என்பது பற்றிய எந்தவொரு சமிக்ஞையையும் சம்பந்தப்பட்ட தரப்பினர் எவரும் இதுவரை முன்வைக்கவில்லை.

இவ்விடயத்தை வசதியாக மறந்துவிடுவதும் பேசாமல் விடுவதும் அவர்களுக்கு ஒரு தற்காலிகமான ஆறுதலாகத்தான் இருக்க முடியும். நிரந்தரமான அரசியல் தீர்வை நோக்கிய நகர்வில் மிக மோசமான பின்விளைவுகளுக்கும் எதிர்வினைகளுக்குமே அது இட்டுச் செல்லும்.

மு. கா. தலைமை மட்டுமல்ல. தமிழ் தலைமைகளும் தங்களுக்கு சங்கடமான விடயங்களில் மௌனம் சாதிக்கும் போக்கு தொடர்ந்தும் நிலவி வருகிறது. இதன் எதிர்விளைவுகள் குறித்து இவர்கள் அலட்டிக் கொள்ளாமல் இருப்பது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியதும் வேதனைக்குரியதுமாகும்.

முஸ்லிம்களை சமத்துவமுள்ள ஒரு தனித்தரப்பாக மதித்து, அரசியல் தீர்வு முயற்சிகளின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களது அரசியல் அபிலாசைகளை உள்வாங்க மறுப்பது பாரதூரமான எதிர்விளைவுகளுக்கே இட்டுச் செல்லும். முன்பு முஸ்லிம்களுக்கென்று ஒரு தனியான நிர்வாகக் கட்டமைப்பு வடக்குக் கிழக்கில் ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக முன்வைக்கப்பட்டதையும் பின்பு அதன் தேவை இல்லாதவாறு வடக்கும், கிழக்கும் தனியாக பிரிக்கப் பட்டது இங்கு கவனத்திற் கொண்டாக வேண்டும்.

இது இவ்வாறிருக்க, இன்று வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிய கதை போன்று வடக்கும் கிழக்கும் இணைக்கப் பட வேண்டும் என கூறப்படுகின்றது இவ்விடயத்தில் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் காட்டிவரும் அக்கறையற்ற அசமந்தப்போக்கு நகைப்புக்குரியதாய் உள்ளது.

எனினும், முஸ்லிம்களது அரசியல் அபிலாசைகளின் அடிப்படைகளைத் திட்டவட்டமாக வரையறுத்து, அதன் அடிப்படையில் எமது அரசியல் நிலைப்பாடுகளை அரசுக்கும் தமிழ் தலைமைகளுக்கும், சர்வதேச சமூகத்திற்கும் முன்வைப்பதுதான் விவேகமானது.

அவ்வப்போது சூழ்நிலைக்கு வேண்டிய எழுந்தமானக் கோரிக்கைகளை முன்வைக்கும் நுணுக்கமின்மைகளிலிருந்து தவிர்ந்து கொள்வதற்கான ஒரே தெரிவு அது மட்டுமே. திட்டவட்டமான அரசியல் நிலைப்பாடுகளை வரையறுப்பதே இப்போது நம் முன்னுள்ள உடனடிப் பணியாகும். இதனை மு. அரசியல் தலைமைகள் உடனடியாக செய்ய வேண்டும்.

தற்போதைய சூழ்நிலையில், வடக்கு-கிழக்கு இணைப்பு தொடர்பாக முஸ்லிம்களது அரசியல் அபிலாசைகளைத் திருப்திப்படுத்தும் ஏற்பாடுகளை வலியுறுத்துவதும், அதற்காகத் தொடர்ச்சியாகப் போராடுவதும் மிக மிக அவசியமாகும். செயற்பட வேண்டிய தருணத்தில் ஓரமாய் ஒதுங்கி இருந்துவிட்டு, முஸ்லிம் தலைமைகள் பின்னர் மக்களிடம் வந்து நியாயங்களையும் சாக்குப் போக்குகளையும் கூற முற்படுவது மிகப் பெரும் கோழைத்தனமாகும். .

Comments