பாராளுமன்றத்தில் அமளி: சபை ஒத்திவைப்பு

காணாமல் போனோர் தொடர்பான பணியகம் அமைப்பது குறித்த சட்டமூலத்திற்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கறுப்பு பட்டி அணிந்து கலகத்தில் ஈடுபட்டதை அடுத்து சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.

குறித்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் இன்று ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலகவினால் கொண்டுவரப்பட்டது.

இந்த சட்டமூலம் மீது இன்று விவாதம் இடம்பெற்று, நாளைய தினம் வாக்களிப்பு இடம்பெறும் என்ற அறிவிப்பையும் அமைச்சர் இதன்போது விடுத்தார்.

இதன்போது குறுக்கீடு செய்த ஒன்றிணைந்த எதிர்க்கட்சித் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன, சர்ச்சைக்கான பிள்ளையார் சுழியை இட்டார்.

குறித்த சட்டமூலத்திற்கு தனது எதிர்ப்பை வெளியிட்ட அவர், இன்றும், நாளையும் முழுநாள் விவாதம் இடம்பெற வேண்டும் என்றும், அவ்வாறு இல்லாவிட்டால் விவாதம் ஒத்திவைக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இந்தக் கோரிக்கைக்கு எதிராக ஆளுந்தரப்பு தங்களது எதிர்ப்பை வெளியிட்ட வேளையில் சபை நடுவே வந்து தமது எதிர்ப்பை வெளியிட ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் முயற்சித்தனர்.

எனினும் சபா மண்டபத்திற்கு நடுவே குழும வேண்டாம் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய மூன்று முறை அறிவுறுத்திய போதிலும், அதனைப் பொருட்படுத்தாமல் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் வந்தனர்.

இதனால் சபையில் பெரும் குழப்ப நிலை ஏற்பட்டதை தொடர்ந்து குறித்த சட்டமூலம் மீதான விவாதம் தொடர்பில் கட்சித் தலைவர்கள் மத்தியில் பேச்சு நடத்தி முடிவெடுக்கும் வரை சபையை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.

Comments