நேற்று ஒன்றரை கோடி ரூபா ஹெரோயினுடன் சிக்கியவர் விபரம் மற்றும் அவரது பின்னணி வெளியானது
பிரபலமான போதைப் பொருள் கடத்தல் மற்றும் விநியோகத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்களில் ஒருவரும் அவரது கையாள் ஒருவரும் வெள்ளவத்தையில் வைத்து பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் ரங்கஜீவவின் ஆலோசனைக்கு அமைய கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றுக்கும் விசாரணையில் வெளிப்படுத்தப்பட்ட தகவல் ஒன்றுக்கும் அமைவாக முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நடவடிக்கைகளின் போதே, வெள்ளவத்தை, பெர்னாண்டோ மாவத்தையில் வைத்து மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது இவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று காலை 7.40 மணியளவில் வெல்லம்பிட்டி, வெள்ளவத்தை பகுதியில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் முன்னெடுத்த நடவடிக்கையில் 25 கிராம் ஹெரோயினை உடன் வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பலனாகவே வெள்ளவத்தையில் வைத்து சிறப்பு நடவடிக்கையை முன்னெடுத்து சந்தேக நபர்களைக் கைதுசெய்ததாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர கேசரிக்கு தெரிவித்தார்.
இந்த கைதினையடுத்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸார் முன்னெடுத்த சிறப்பு விசாரணைகளில் பிரதான கடத்தல் காரர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட பிரபல போதைப் பொருள் கடத்தல் மன்னன் பெரோஸ் என்பவரின் சகோதரரான 45 வயதுடைய நீர்கொழும்பு - கொச்சிக்கடை பகுதியைச் சேர்ந்த நவாஸ் என்பது தெரியவந்துள்ளது.
அத்துடன் அவரின் உதவியாளராக செயற்பட்டவர் 24 வயதுடைய யாழ்.பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதும் விசாரணைகளில் உறுதியாகியுள்ளது.
பிரபல போதைப் பொருள் கடத்தல் மன்னர்களான மொஹம்மட் சித்திக், வெலே சுதா, மாத்தறை மதூஸ் மற்றும் பொடி சுது ஆகியோரின் போதைப் பொருளினையே சந்தேக நபர்கள் நாடளாவிய ரீதியில் விநியோகித்தது தெரியவந்துள்ளது.
அத்துடன் பிரதான சந்தேக நபரான நவாஸ், தனது யாழ். உதவியாளர் ஊடாக குறித்த ஹெரோயின் போதைப் பொருளை யாழ். பகுதிக்கு தடையின்றி விநியோகித்து வந்துள்ளமை தொடர்பிலும் தகவல் கிடைத்துள்ளதுடன், நேற்று கைது செய்யப்படும் போது எடுத்துச் செல்லப்பட்டுக்கொண்டிருந்த ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான ஒன்றரை கிலோ ஹெரோயினும் கூட யாழ். பகுதிக்கு விநியோகிக்கப்பட தயார் நிலையில் இருந்ததா எனவும் விசாரணைகள் இடம்பெறுகின்றன.
சந்தேக நபர்கள் இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ள நிலையில், மேலதிக விசாரணைகள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்கவின் மேற்பார்வையில் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கமல் சில்வாவின் ஆலோசனையின் பிரகாரம் அதன் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஹிரியாதாஸவின் கீழ், பொலிஸ் பரிசோதகர் ரங்கஜீவ மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் கயந்த உள்ளிட்ட குழுவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Comments
Post a Comment