தமிழ் பாடசாலைகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட பரீட்ச்சை வினாத்தாள்கள் முஸ்லிம் பாடசாலைகளுக்கு !


சப்ரகமுவ மாகாண கல்வித் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்டு மாகாண முஸ்லிம் பாடசாலைகளுக்கு இரண்டாம் தவணைப் பரீட்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள வினாத்தாள்களுள் பெரும்பாலான வினாத்தாள்கள் ஏற்கெனவே தமிழ் பாடசாலைகளில் இரண்டாம் தவணைப் பரீட்சைக்கு விநியோகம் செய்யப்பட்ட வினாத்தாள்களாக காணப்படுகின்றமை தொடர்பில் சப்ரகமுவ மாகாண முஸ்லிம் பாடசாலைகள் அதிர்ச்சி தெரிவித்துள்ளன.

குறிப்பாக நோன்பு விடுமுறையின் பின்னர்  முஸ்லிம் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு கடந்த ஜுலை 18 ஆம் திகதி முதல் நடைபெற்று வரும் தரம் 10 , தரம் 11 மாணவர்களுக்கான இரண்டாம் தவணைப் பரீட்சையின் தமிழ் மொழி ,கணிதம் ,விஞ்ஞானம் ஆகிய முக்கிய பாடங்களுக்குரிய வினாத்தாள்களும் ஏற்கெனவே சப்ரகமுவ மாகாண கல்வித் திணைக்களத்தினால் தமிழ் பாடசாலைகளுக்கு இரண்டாம் தவணைப் பரீட்சைக்காக வழங்கப்பட்ட வினாத்தாள்களாகவே காணப்படுகின்றன . இதனால் இவ்வருட இறுதியில் கா.பொ.சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள முஸ்லிம் மாணவர்களின் உண்மையான பாட அடைவு மட்டத்தை அறிய முடியாத நிலையுள்ளதாகவும் பாட ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

ஏனெனில் குறிப்பிட்ட பாடப் பரீட்சைகள் இடம் பெறுவதற்கு ஓரிரு தினங்களுக்கு முன்னர்   மேற்படி வினாத்தாள்கள் அனைத்தும் தனியார் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் மத்தியில்  கலந்துரையாடப்பட்டுள்ள விடயமும் பாடசாலை ஆசிரியர்கள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. 
சப்ரகமுவ மாகாண கல்வித் திணைக்களத்தினுடைய  மேற்படி பொறுப்பற்ற செயல் தொடர்பில் முஸ்லிம் சமூகம் தமது அதிதிருப்த்தியை தெரிவித்து வருகின்றனர்.

சப்ரகமுவ மாகாண கல்வித் திணைக்களத்தில் தமிழ் மொழி மூல பாடசாலைகள் தொடர்பில் இரண்டு தமிழ் கல்விப் பணிப்பாளர்கள் கடமை புரிகின்ற நிலையில் இவ்வாறான சமூக அநீதிகளுக்கு முஸ்லிம் மாணவர்கள் முகங்கொடுக்க நேர்ந்துள்ளமையை இட்டு முஸ்லிம் பெற்றோர்கள்  முஸ்லிம் பாடசாலைகளின் எதிர்காலம் தொடர்பிலும் சந்தேகம் கொண்டுள்ளனர்.

சப்ரகமுவ மாகாண கல்வித் திணைக்களத்தின் மேற்படி  பொறுப்பற்ற செயல் குறித்து  உரிய அதிகாரிகள் மீது உடணடியாக விசாரணைகள் மேற்கொண்டு முஸ்லிம் பாடசாலைகளுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சர் அகில விறாஜ் காரியவசம் அவர்களிடம் முஸ்லிம் சமூகம் வேண்டுகோள் விடுக்க விரும்புகிறது.
மேற்படி மாகாண முஸ்லிம் பாடசாகளில் தரம் 6 முதல் தரம் 9 வரையான மாணவர்களுக்கான இரண்டாம் தவணைப் பரீட்சைகள் நாளை 2ஆம் திகதி முதல் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும் .

சப்ரகமுவ மாகாணத்தில் நூற்றுக்கும் அதிகமான முஸ்லிம் பாடசாலைகள் காணப்படுகின்ற போதிலும் கடந்த பல வருடங்களாக  மாகாண முஸ்லிம் உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் எவரும் நியமிக்கப்படாமை தொடர்பிலும் கல்வி அமைச்சர் கௌரவ அகில விறாஜ் காரியவசம் அவர்களை சந்தித்து வேண்டுகோள் விடுப்பதற்கும் முஸ்லிம் சமூகம் எதிர்பார்த்துள்ளனர்.

எம்.எல்.எஸ்.முஹம்மத் -இரத்தினபுரி

Comments