வர்த்தகர் சுலைமானின் கொலை: 08 பேரிடம் அடையாள அணிவகுப்பு

கொலை செய்யப்பட்ட வர்த்தகர் மொஹமட் ஷாகிப் சுலைமானின் வழக்கில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 08 சந்தேகநபர்களையும் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தும் வரை அவர்களின் பெயர், ஊர் உள்ளிட்ட விபரங்களை வெளியிட வேண்டாம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வர்த்தகர் புறக்கோட்டை 3ஆம் குறுக்கு தெருவில் உள்ள மொத்த விற்பனை நிலையமொன்றை நடத்தி வந்த நிலையில், அவரிடம் 8 வருடங்களாக நம்பிக்கைக்கு உரிய முறையில் ஊழியராக இருந்தவரே இந்த கொலையின் பிரதான சூத்திரதாரி என பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார்.

குறித்த சந்தேகநபர் வர்த்தகரிடமிருந்து இரண்டு கோடி ரூபாயை கப்பமாக பெறும் நோக்கில் அவரை கடத்த திட்டமிட்டுள்ளதால், இதற்காக புறக்கோட்டையில் நாட்டாமை தொழில் ஈடுபடும் மூவரையும், முச்சக்கரவண்டி சாரதிகளையும் இணைத்துள்ளார்.

இந்த நிலையில் வர்த்தகரை கடத்தி சென்ற போது, அவர் தப்பிக்க முற்பட்டமையால் தலையில் பின்புறமாக தாக்கியுள்ளனர்.

அத்துடன், வர்த்தகர் இறந்தமையால் அவரது சடலத்தை மாவனெல்ல பகுதியில் வீசியதுடன், அவரது கைப்பேசி, உள்ளாடைகள் மற்றும் கொலைக்கு பயன்படுத்திய உபகரணங்கள் என்பவற்றை கேகாலையின் வெவ்வேறு இடங்களில் புதைத்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

29 வயதான வர்த்தகரான இவர் கடந்த 21ஆம் திகதி இரவு கடத்தப்பட்டு 24ஆம் திகதி கொலை செய்யப்பட்ட நிலையில் மாவனெல்லையில் சடலமாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments