Posted by
Kantalai News
இலங்கையின் 1000 பேரின் ஹஜ் கனவு தகர்ந்தது - வேதனையும், கண்ணீரும் மிஞ்சியது
.
ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு இவ்வருடம் ஹஜ் கைநழுவிப் போய்விட்டது. அவர்கள் புனித கடமைக்காக ஆயத்தங்களுடன் காத்திருந்தவர்கள். எப்போதுமில்லாதவாறு இவ்வருடம் மேலதிகக் கோட்டா கிடைக்கப்போகிறது என்ற நம்பிக்கை மக்களுக்கு ஊட்டப்பட்டது.
ஹஜ் முகவர்களும் தமது நலன்கருதி மக்களின் கடவுச்சீட்டுகளை சேகரித்துக் கொண்டார்கள். சில முகவர்கள் முற்பணமும் பெற்றுக் கொண்டார்கள்.
முஸ்லிம் சமய விவகார அமைச்சு இறுதிநாளில் அதிரடி செய்தியொன்றை வெளியிட்டது ‘மேலதிக ஹஜ் கோட்டா கிடைக்காது’ என்பதே அந்தச் செய்தி. ஹஜ் கனவில், ஆன்மீக சிந்தனையில் மூழ்கியிருந்தவர்கள் ஆடிப்போய்விட்டார்கள். அவர்களால் கண்கலங்கத்தான் முடிந்தது. ஹஜ் முகவர்கள் அல்லாஹ் அளந்தது தான் எமக்குக் கிடைக்கும்.
என்ன செய்ய முடியும். எல்லாம் அல்லாஹ்வின் நாட்டம் என்று ஆறுதல் அடைந்தார்கள். ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஹஜ் கடமையை தவறவிட்ட மக்களின் வேதனைகளையும், அவர்கள் சிந்திய கண்ணீரையும் மறந்துவிட்டு இறுதி ஹஜ் குழு கடந்த 5 ஆம் திகதி திங்கட்கிழமை நண்பகல் பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்திலிருந்து ஜித்தா நோக்கி புறப்பட்டுச் சென்றது.
இக்குழுவில் முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.எ.ஹலீம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, திருகோணமலை மாவட்ட ஐ.தே.கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் அடங்கியிருந்தனர்.
மேலும், அரச ஹஜ் குழுவின் தலைவர் உட்பட முக்கியஸ்தர்கள், முஸ்லிம் கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் உட்பட அதிகாரிகளும் ஹஜ் கடமைக்காக வானில் பறந்தார்கள். அவர்கள் கொடுத்து வைத்தவர்கள்..


Comments
Post a Comment