முன்னைய ஆட்சியாளர்களின் அநீதிகள் தொடர்பாக குறைபட்டுக் கொண்டவர்களே இன்று அவர்களுடன் அணி சேர்ந்துள்ளனர் – ஜனாதிபதி

முன்னைய ஆட்சியிலும் கட்சியிலும் தமக்கு ஏற்பட்ட அநீதிகள் தொடர்பாக தம்மிடம் மனக்குறைகளை வெளிப்படுத்தியவர்களே இன்று அத்தகைய தொந்தரவுகளைக் கொடுத்தவர்களுடன் இணைந்து புதியதொரு சக்தியை உருவாக்க முயற்சித்துவருவதாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.

நேற்று (31) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் காலம்சென்ற ஜெயராஜ் பெர்ணாந்துபுள்ளே அவர்களின் உருவத்தையொத்த மெழுகினாலான உருவச்சிலையைத் திறந்துவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

திரு.ஜெயராஜ் பெர்ணாந்துபுள்ளே அவர்கள் நாட்டுக்கும் கட்சிக்கும் தேவையான ஒரு சந்தர்ப்பத்தில் அவர் எம்மைவிட்டும் பிரிந்துவிட்டபோதும் அவர் இந்நாட்டின் தேசிய அரசியலில் உயிர்வாழும் ஒரு ஆளுமையாவார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு மிகப்பெரும் பலமாக இருந்த ஜெயராஜ் பெர்ணாந்துபுள்ளே அவர்களும் தாமும் அன்று அரசாங்கத்திலும் கட்சியிலும் பல்வேறு உள்ளகப் பிரச்சினைகளுக்கும் மன உழைச்சல்களுக்கும் ஆளாகியதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அவர் உயிரோடு இருந்திருப்பின் தமக்கு முன்னரே முன்பிருந்த அரசாங்கத்திலிருந்து விலகிச்சென்றிருப்பார் என்றும் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் செய்ததாக சிலர் வாய்ச்சவடால் விட்டபோதும் ஜனாதிபதி ஜே ஆர் ஜயவர்த்தன அவர்களது அரசாங்கத்துடன் போராடுவதற்கு சிறிமாவோ பண்டாரநாயக்க அம்மையாருடன் மிகவும் சொற்பமான சிரேஷ்ட உறுப்பினர்களே இருந்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இளம் அரசியல்வாதிகளாக அன்று ஜெயராஜ் பெர்ணாந்துபுள்ளே அவர்களைப் போன்று கட்சிக்காக தாம் பொறுப்புக்களை நிறைவேற்றியதை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, தேசிய அரசியலில் சகல பொறுப்புக்களையும் கடமைகளையும் மிகவும் நேர்மையாகவும் அமைதியாகவும் நிறைவேற்றிய ஜெயராஜ் பெர்ணாந்துபுள்ளே அவர்கள் இந்நாட்டின் எழுந்துவரும் ஒரு அரசியல் தலைவராக மிளிரக்கூடிய அறிகுறி அவரிடம் காணப்பட்டதாகவும் தெரிவித்தார்.

அவரிடமிருந்த மொழியாற்றல், உரையாற்றும் திறன், அரசாங்கத்திலும் கட்சியிலும் எழும்பிரச்சினைகளைத் தீர்த்துவைத்து உள்ளக ஐக்கியத்தைப் பாதுகாத்த விதம் என்பன குறிப்பிடத்தக்கதாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இத்தகைய மெழுகினாலான உருவச்சிலையொன்று இலங்கையில் நிர்மாணிக்கப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்பதோடு, சிற்பகலைஞர் அத்துல ஹேரத் அவர்களினால் இச்சிலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனீ பெர்ணாந்துபுள்ளே அவர்கள் ஜெயராஜ் பெர்ணாந்துபுள்ளே அவர்களின் நினைவுமலரை ஜனாதிபதியிடம் கையளித்தார்.

மகாசங்கத்தினர் உள்ளிட்ட ஏனைய சமயத்தலைவர்கள் அமைச்சர்கள் ஜெயராஜ் பெர்ணாந்துபுள்ளே அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Comments