இலங்கை மலேரியா அற்ற நாடு: உலக சுகாதார நிறுவனம் பாராட்டு!

இலங்கையை மலேரியா அற்ற நாடாக பிரகடனப்படுத்தி இருக்கும் உலக சுகாதார நிறுவனம், மலேரியா ஒழிப்பு தொடர்பில் இலங்கை மேற்கொண்ட நடவடிக்கைகளை ஒரு உண்மையான குறிப்பிடத்தக்க சாதனை என்று பாராட்டியுள்ளது.

20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இலங்கையானது மலேரியாவினால் பாதிக்கப்பட்ட மோசமான நாடுகளில் ஒன்றாக காணப்பட்டது.

ஆனால் மலேரியாவை ஒழிப்பதற்கு இலங்கையானது மலேரியா ஒட்டுண்ணியை காவும் நுளம்புகளை மட்டுமன்றி அந்த ஒட்டுண்ணிகளை அழிப்பதற்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு இந்த சாதனையை அடைந்திருக்கிறது என்று அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுகாதார கல்வி மற்றும் வினைத்திறன் மிக்க கண்காணிப்பு ஆகியவையும் இதற்கு உதவி இருக்கிறது. கடந்த மூன்றரை ஆண்டு காலத்தில் இலங்கையில் எந்த மலேரியா தாக்கமும் அறியப்படவில்லை என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments