ஏறாவூர் தாய் சித்தி உசைரா மற்றும் மகள் ஜெசீரா பாணு படுகொலை இன்று முக்கிய குற்றாவாளிகள் சிக்கினர்.

.


ஏறாவூர் பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டைக்கொலை தொடர்பாக சந்தேகத்தில் பேரில் நான்கு பேர் இன்று  17.09.2016ம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏறாவூரைச்சேர்ந்த மூவரும் ஓட்டமாவடிப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரும் இதிலடங்குகின்றனர். விசாரணையில் பல தகவல்கள் வெளிவந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

பணம், நகைகள் கொள்ளையிட வந்த வேளை ஆட்கள் அடையாளங்கா ணப்பட்டதனால், கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் அறிய வந்துள்ளது.

ஏறாவூர்- முகாந்திரம் வீதியிலுள்ள வீட்டில் படுத்துறங்கிய 56 வயதான என்எம்.சித்தி உசைரா மற்றும் அவரது திருமணமான மகளான 32 வயதுடைய ஜெசீரா பாணு மாஹிர் ஆகியோர் கடந்த 11.09.2016ம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று பொல்லால் அடித்துக் கொடூரமாகக்கொலை செய்யப்பட்டிருந்தமை தெரிந்ததே.

இச்சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு மற்றும் ஏறாவூர் பொலிஸ் நிலையங்களின் இரண்டு குழுக்கள் புலன்விசாரணை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தன.

இதன் போது, கொலை செய்யப்பட்ட ஜெனீராவின் கணவரின் தம்பி ஏற்கனவே விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இதையடுத்து மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸார் கூறினர். பொது மக்கள் பொலிஸாரின் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை நல்கியதனாலேயே இவ்விடயம் வெற்றிகரமாகியுள்ளதாகவும், பொது மக்களைப் பாராட்டுவதாகவும் ஏறாவூர்ப் பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி சின்தக்க பீரிஸ் தெரிவித்தார்.

இக்கொலைச் சம்பவம் ஏறாவூர்ப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை மாத்திரமின்றி, மக்கள் மத்தியில் பாரிய அச்சத்தையும் ஏற்படுத்தியிருந்தது. ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டதையடுத்து, பொது மக்கள் பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டுமெனக்கோரி பொது அமைப்புக்களினால் கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, பொது மக்கள் வெள்ளைக்கொடிகள் பதாதைகளைத் தொங்க விட்டு, அமைதிகாத்துடன் பொலிஸாருக்கு தகவல்களையும் வழங்கி வந்தனர்.
.

Comments