.எவன்கார்ட் எங்கள் ஆதரவுடனேயே ஆரம்பிக்கப்பட்டது!

நல்லாட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டு ஒன்றரை வருடம் கடந்துள்ள நிலையில், ஏதேனும் ஒரு மேடையிலாவது, தன்னை பற்றியோ அல்லது ராஜபக்சக்கள் பற்றி பேசாமல் இவர்களால் அரசியல் நடத்த முடிந்ததா என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மலேஷியாவிற்கான பயணத்தை மேற்கொள்ளவதற்கு முன்னதாக, மிங்கிரிய பிரதேசத்தில் கலந்துகொண்ட நிகழ்வு ஒன்றில் வைத்து இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ராஜபக்சக்களை, திட்டமிட்டு ஒவ்வொருவராக இந்த அரசு பழிவாங்கி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்,

அத்துடன் ராஜபக்சக்களின் பட்டியலில் தற்போது, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தினார் என குற்றம் சுமத்தப்பட்டு, அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கோட்டாபய ராஜபக்ச யுத்த வெற்றியில் பெரும் பங்காற்றியவர். அதனாலேயே அவர் இன்று குற்றவாளியாக, இந்த அரசாங்கத்தினால் பச்சை குத்தப்படுகிறார் எனவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அத்துடன், அரசங்கதிற்கு நஷ்டம் ஏற்படுத்திய குற்றம் கோட்டாபய ராஜபக்ச மீது சுமத்தப்படுவதற்கு முன்னதாக, பல கோடி ரூபாய்களை நஷடமாக்கிய மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை முதலில் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுங்கள் என, அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், எவன்கார்ட்  நிறுவனத்தை ஆரம்பிப்பதற்கான பூரண ஒத்துழைப்பையும், அனுமதியையும் கடந்த அரசு கோட்டாபய ராஜபக்சவிற்கு வழங்கியதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எவன்கார்ட்  தனியார் நிறுவனத்திற்கு சட்டவிரோத அனுமதி வழங்கியதன் ஊடாக அரசிக்கு 11.4 பில்லியன் ரூபாய்களுக்கு அதிகமான தொகையை நஷ்டப்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டே, கோட்டபாய ராஜபக்ச உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Comments