யாரையும் ஏமாற்றி அரசியல் தீர்வை பெற முடியாது!

யாரும் யாரையும் ஏமாற்றி, திருப்திகரமானதும் நியாயமானதும் நிரந்தரமானதுமான ஒரு அரசியல் தீர்வை நாம் அடையமுடியாது என எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண விவசாய கால்நடைகள் கூட்டுறவு மீன்பிடித்துறை அமைச்சின் ஏற்பாட்டில் ‘கிழக்கின் எழுச்சி’ என்ற கருப்பொருளில் விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தலைமையிலான விவசாய கண்காட்சி நேற்று சம்பூர் மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது.

குறித்த கண்காட்சியை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சி தலைவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

நாட்டில் ஏற்படுத்தப்படவுள்ள அரசியல் தீர்வானது, பெரும்பான்மை, சிறுபான்மை என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் ஏற்ற வகையில் நியாயமான முறையில் ஏற்படுத்தப்பட வேண்டும்.

சில அரசியல் தலைவர்கள் மற்றும் சில இனங்களின் தலைவர்கள் தமது இனத்தை ஏமாற்றுவதற்காக பொய்யான கூற்றுக்களை முன்வைத்து வருகின்றனர்.

ஆனால் எவரையும் ஏமாற்றி ஒரு முறையான அரசியல் சாசனத்தை நாம் பெற முடியாது.

மேலும், இவ்வாறான சில அரசியல் தலைவர்கள் அரசியல் தீர்வு விவகாரங்களை, தங்கள் தனிப்பட்ட நலனுக்காக பயன்படுத்துவதாகவே தோன்றுகின்றது.

எனவே அவ்விதமான செயற்பாடுகளை அவர்கள் உடனடியாக நிறுத்தவேண்டும்.

நாட்டின் நன்மைக்காகவும் மக்களின் நன்மைக்காகவும் அரசியல் தலைவர்கள் நிதானமாக சிந்தித்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாகவும் எதிர்க்கட்சி தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments