சார்க் மாநாட்டிற்கு வந்த சோதனை!

பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமபாத்தில் நடக்கவிருந்த 19வது சார்க் மாநாடு ஒத்திவைக்கப்படும் சூழல் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நான்கு உறுப்பு நாடுகள் பங்கேற்க மறுப்பு தெரிவித்துள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமபாத்தில் வரும் நவம்பர் 9 மற்றும் 10 திகதிகளில் சார்க் அமைப்பின் 19-வது சார்க் மாநாடு நடக்கவிருந்தது.

ஆனால் உரி தாக்குதல் சம்பவத்தில் பாகிஸ்தானின் பங்கு இருப்பதை சுட்டிக்காட்டிய இந்தியா மாநாட்டில் பங்கேற்கப்போவதில்லை என்று அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து பிராந்தியத்தில் வன்முறை சம்பவங்களுக்கான தூண்டுதல் நிகழ்வதை காரணம் காட்டி ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் பூடான் ஆகிய நாடுகளும் மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்தன.

தற்போது சார்க் அமைப்புக்கு நேபாளம் தலைமை வகித்து வருகிறது. குறிப்பிட்ட நான்கு நாடுகளிலிருந்து பங்கேற்கவியலாமையை சுட்டிக்காட்டி கடிதங்கள் வந்திருப்பதை உறுதி செய்த நேபாளம் இந்த விஷயத்தில் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை.

சார்க் அமைப்பின் விதிகளின் படி அங்கத்தினராயிருக்கும் நாடுகளிடையே கருத்தொற்றுமை மிகவும் முக்கியம் என்பதால், இந்த மாநாடு தள்ளி வைக்கப்படுவதற்கோ அல்லது இரத்து செய்யப்படுவதற்கோ வாய்ப்புகள் அதிகம் உண்டு என்று தெரியவருகிறது.

Comments