ஈரானின் சதிகளை முறியடிக்க சவுதியுடன் என்றும் இணைந்திருப்போம் – பஹ்ரைன் தூதுவர்.

மிக மோசமான பயங்கரவாதத்தினை உருவாக்கி வளைகுடா மற்றும் அரபு நாடுகளில் தாக்குதல்களை மேற்கொண்டு பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை குழப்பி பிராந்தியத்தினை தமது கட்டுப்பாட்டினுள் வைத்திருப்பதற்கான திட்டத்தினை செயற்படுத்த முனையும் ஈரானின் சதித் திட்டங்களுக்கு முகங்கொடுத்து அதனை முறியடிப்பதற்கு சவுதி அரேபியாவுடன் இணைந்து என்றும் பக்கபலமாக செயற்படுவோம் என சவுதிக்கான பஹ்ரைன் தூதுவர் ஷெய்க் ஹமூத் அல் கலீபா தெரிவித்துள்ளார்.

அல்வத்ன் செய்திப்பத்திரிகைக்கு வெள்ளியன்று வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்குறித்த கருத்துக்களை தெரிவித்தார். அத்துடன் சவுதி அரேபியா மற்றும் வளைகுடா நாடுகளுக்கு எதிராக தெஹ்ரான் அரசாங்கம் ஊடக யுத்தத்தினை தொடுத்துள்ளது. இது அவர்களின் பயங்கரவாத சதித்திட்டத்தின் ஒரு அங்கமாகும், முல்லாக்களின் ஆட்சி ஆரம்பித்ததில் இருந்து தொடங்கிய பயங்கரவாத செயற்பாடுகளை ஈரான் இன்னும் நிறுத்தவில்லை என மேலும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, சவுதி அரேபியா ஈரானிய யாத்திரிகர்களை ஹஜ் கடமையினை நிறைவேற்றவிடாமல் தடுத்தவிட்டதாக சவுதிக்கு எதிராக ஈரானினால் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் மிகத் தெளிவான பொய், ஏனெனில், சவுதி அரசாங்கம் ஈரானிய யாத்திரிகர்கள் ஹஜ் கடமைக்காக பதிவு செய்து கொள்வதற்கு ஈரானிய தரப்பினருக்கு அதிகமான சந்தர்ப்பங்களை வழங்கியது. ஆனால் அவைகளை எல்லாம் தமது சொந்த அரசியல் காரணங்களுக்காக ஈரான் அரசாங்கம் நிராகரித்துவிட்டு தமது நிலையில் பிடிவாதமாய் இருக்கின்றனர் என தெரிவித்த அவர், ஈரானிய அரசாங்கம் யாத்திரிகர்களை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தி வருவதாகவும் சுட்டிக் காட்டினார். அல்லாஹ்வுக்கு மிகவும் நெருக்கமாகின்ற ஹஜ் கடமையினை நிறைவேற்றுவதை அரசியல் மயப்படுத்தி அதனை தடுக்கும் ஈரானின் செயற்பாட்டினை எந்தவொரு மனிதாபிமானமுள்ள முஸ்லிமும் ஏற்றுக் கொள்ளமாட்டான் எனவும் அவர் தெரிவித்தார்.

புனித ஹஜ்ஜினை அரசியல் மயப்படுத்தி தமது நாட்டு யாத்திரிகர்களை ஹஜ் கடமைக்கு செல்லாவிடாமல் தடுத்திருப்பதன் மூலம் ஈரான் அரசாங்கம் மிக ஆபத்தான அரசியல் விளையாட்டினை ஆடிக்கொண்டிருப்பதை நாம் எல்லோரும் அறிவோம் எனவும் சவுதிக்கான பஹ்ரைன் தூதுவர் தெரிவித்தார்.

Comments