புஸ்ஸல்லாவ இளைஞர் மரணம் தொடர்பில் நீதிபதியின் அதிரடி நடவடிக்கை!

புஸ்ஸல்லாவ பகுதியில் பொலிஸ் பாதுகாப்பில் இருந்த இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் இடத்தை இன்று நீதிபதி பார்வையிட்டார்.

புஸ்ஸல்லாவ – ரொத்சைல்ட் தோட்டத்தை சேர்ந்த நடராஜ் ரவிசந்திரனின் மரணம் தொடர்பிலான வழக்கு கடந்த 23ம் திகதி கம்பளை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது நீதிபதி சாந்தனி மீகொட ரவிசந்திரனின் தந்தையிடமும் அண்ணனிடமும் விசாரணைகளை மேற்கொண்டார். பின் பொலிஸாரிடம் விசாரித்த அவர் தற்கொலைக்கு பயன்படுத்தியதாக கூறப்படும் டீசேட்டை பரிசோதனைக்கு உட்படுத்தி சுருக்கு ஒன்றை போடுமாறு சட்டத்தரணிக்கு பணித்தார்.

பின்னர் விடயங்களை ஆராய்ந்த நீதிபதி வழக்கை 14.10.2016 வரைக்கும் ஒத்திவைத்தார்.

மேலும் சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படும் புஸ்ஸல்லாவ பொலிஸ் நிலையத்தின் சிறைசாலையை பார்வையிட இன்று அங்கு சென்ற நீதிபதி சாந்தனி மீகொட, அங்கு விசாரணைகளை மேற்கொண்டார்.

இதன்போது மாதிரி டீசேட் ஒன்றின் மூலம் தூக்கில் தொங்கிய நிலையை பார்த்த அவர், பொலிஸாரிடம் விளக்கத்தையும் விதத்தினையும் கேட்டு அறிந்து பதிவு செய்துக் கொண்டார்.

நடராஜா ரவிசந்திரன் என்ற 31 வயது இளைஞன் குற்றச் செயல் ஒன்றின் காரணமாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றுக்கு அழைக்கப்பட்டு, சமூக சேவைக்கு உள்வாங்கப்பட்டிருந்தார்.

எனினும் அந்த சமூக சேவையை முறையாக செய்யாத நிலையில், ஹெல்பொட நீதிமன்றினால் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

எனவே கைதுசெய்யப்பட்ட குறித்த இளைஞர் புஸ்ஸல்லாவ பொலிஸ் நிலையத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்தார்.

இதனையடுத்து புஸ்ஸல்லாவ பிரதேசத்தில் பாரிய பதற்ற நிலை தோன்றியது.

பிரேதப் பரிசோதனைகளின் பின்னர் அவரது உடற்பாகங்கள் கொழும்பிற்கு பரிசோதனைக்காக அனுப்பட்டது.

இதனையடுத்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட சடலம் கடந்த 19.09.2016 பி.ப 3.00 மணியளவில் தோட்ட பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments