திருமலையில் காணாமற்போன சிறுவர்கள் மீட்பு: பெற்றோர் கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேற்றம்


.திருமலையில் காணாமற்போன சிறுவர்கள் மீட்பு: பெற்றோர் கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேற்றம்

திருகோணமலை, உப்புவெளி பகுதியில் காணாமற்போனதாகக் கூறப்பட்ட சிறுவனும், சிறுமியும் மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் மீட்கப்பட்டுள்ளனர்.
மேலதிக வகுப்பிற்காக கண்ணியா சென்றபோது, நேற்று மாலை இரு பிள்ளைகளும் காணாமற்போயுள்ளதாக அவர்களின் பெற்றோர்களால் பொலிஸில் முறைபாடு செய்யப்பட்டிருந்தது.
உறவுமுறை சகோதரர்களான 9 வயதான சிறுமி மற்றும் 11 வயதான சிறுவன் ஆகியோரே காணாமற்போயிருந்தனர்.
இந்த நிலைமையின் கீழ், இவர்கள் இருவரும் வாழைச்சேனை ரயில் நிலையத்தில் நிர்க்கதிக்குள்ளான நிலையில் இருந்தபோது இன்று மீட்கப்பட்டனர்.
சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளின் கண்காணிப்புடன் வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
தத்தமது பெற்றோர் அநாவசியமாகத் தம்மை கண்டிப்பதாகவும், அதன் காரணமாகவே இருவரும் வீட்டைவிட்டு தப்பியோடியதாகவும் விசாரணையின்போது இரண்டு சிறுவர்களும் கூறியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இரண்டு சிறுவர்களையும் மருத்துவ பரிசோதனையின் பின்னர் வாழைச்சேனை நீதிமன்றத்தில் நாளை (14) ஆஜர்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இரண்டு சிறுவர்களும் காணாமற்போனதாகக் கிடைத்த முறைப்பாட்டை அடுத்து சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக ஐந்து பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்..


Comments