மஹிந்தவால் இனி ஆட்சியை கைப்பற்ற முடியாது!
மஹிந்த ராஜபக்ஷவினால் இன்னும் 20 வருடங்களுக்கு மீண்டும் ஆட்சியை கைப்பற்ற முடியாது என மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
களுத்துறையில் நேற்று முன்தினம் நடைபெற்ற கட்சி மாவட்ட சம்மேளனத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்டவர்,
‘2015 ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி மக்கள் ஆணையின் அடிப்படையிலே அரசியல் பயணம் தீர்மானிக்கப்பட்டது. அதேபோன்று 2020ஆம் ஆண்டு தேசிய தேர்தல்கள் இரண்டு இடம்பெற இருக்கின்றன. 2020ஆம் ஆண்டு அல்லாமல் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஒருபோதும் அதிகாரத்துக்கு வர முடியாது.
அத்துடன் நாட்டில் ஏற்பட்டிருந்த பயங்கரவாத யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கு ஜாதிக ஹெல உறுமயதான் முன்னின்று செயற்பட்டது.
மாவிலாறு அணையை திறந்து பயங்கரவாதத்தை விரட்டியடிப்பதற்கு நடவடிக்கை எடுத்தோம். நாட்டில் தற்போது பயங்கரவாதம் தலைதூக்கி இருப்பதாக சிலர் தெரிவித்து வருகின்றனர்.
மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் வாக்குறுதி பத்திரத்தில்கூட பயங்கரவாதத்தை தோற்கடிப்பதாக தெரிவித்திருக்கவில்லை. மாறாக பிரபாகரனை தோற்கடிப்பதாகவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
சிலர் பாதைகளில் அமர்ந்திருந்து உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்தாலும் பயங்கரவாதத்தை தோற்கடித்து அமைதியானதோர் நாடாக இந்த நாட்டை ஏற்படுத்தியது ஜாதிக ஹெல உறுமயவாகும்.
மேலும் சந்திரிகா குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் நிறைவேற்று ஜனாதிபதி முறையை இல்லாமலாக்குவதாக தெரிவித்தனர். ஆனால் செய்யவில்லை. அதேபோன்று 2005 ஆம் ஆண்டில் மஹிந்த ராஜபக்ஷ நிறைவேற்று ஜனாதிபதி முறையை இல்லாமலாக்குவதாக தெரிவித்தார். ஆனால் அதிகாரத்துக்கு வந்ததும் குடும்பத்தாரை பக்கத்தில் வைத்துக்கொண்டார்.
தொலைக்காட்சி அலைவரிசைகளை ஆரம்பித்தார். அன்றும் அதிகார போதையிலேயே இருந்தார். இன்றும் அதிகார போதையிலேயே இருக்கின்றார்.
அதேபோன்று தேர்தலில் ஒரு வாக்குக்காக 43ஆயிரம் ரூபா செலவழித்தார். ஆனால் அவருக்கும் இந்த நாட்டின் அதிகாரத்தை மீண்டும் வழங்குவதற்கு மக்கள் விரும்பவில்லை.
தற்போது இந்த அரசாங்கம் தகுதி, திறமையின் அடிப்படையிலேயே பதவிகளை வழங்க நடவடிக்கை எடுத்து வருகின்றது. புதியதொரு பயணத்தை மேற்கொள்வதற்கு நாட்டு மக்கள் ஆரோக்கியமானவர்களாக இருக்கவேண்டும்.


Comments
Post a Comment