மலேசிய உயர் ஸ்தானிகரை தாக்கிய இருவர் பிணையில் விடுதலை..

இருவரையும் 7000 மலேசிய ரிங்கிட் பணப் பெறுமதியில் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளதுடன், அடுத்த மாதம் 07ம் திகதி மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.
25 வயதான கலைமுகிலன் என்ற வர்த்தகர் மற்றும் முச்சக்கரவண்டி ஓட்டுநரான 34 வயதான பாலமுருகன் ஆகிய இருவரே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தாம் இருவரும் குறித்த சம்பவத்துடன் தொடர்பில்லை என்று தம்மீதான குற்றச்சாட்டுக்களை இருவரும் மறுத்துள்ளனர்.
எவ்வாறாயினும் மலேசிய சட்டப்படி இவர்கள் இருவர் மீதான குற்றங்களும் நிரூபிக்கப்படும் பட்சத்தில், இருவருக்கும் இரண்டு வருட சிறை தண்டனை அல்லது தண்டம் அல்லது இரண்டும் சேர்ந்த தண்டனை விதிக்கப்படும் என்று அந்த நாட்டு ஊடக செய்திகளில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 04ம் திகதி கோலாலம்பூர் விமான நிலையத்தில் வைத்து மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சார், சில கும்பலால் தாக்கப்பட்டிருந்ததுடன், இந்த விடயம் சர்வதேச ஊடகங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை இந்த சம்பவம் இடம்பெற்ற சமயத்தில் அந்த நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக புலம்பெயர் விடுதலைப் புலி ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment