சென்றவாரம் காத்தான்குடி, பரீட் நகரில் பெண்ணை தாக்கிவிட்டு பணம், நகையை திருடிய சம்பவத்தில் எதிர்பாராத திருப்பம்.



மட்டக்களப்பில் புதிய காத்தான்குடி, பரீட்நகர் பகுதியில், கடந்த மாதம் 29ஆதம் திகதி திருடப்பட்ட நகைகள் மற்றும் பணம், 13 நாட்களுக்குப் பிறகு அதே இடத்தில் வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

கடந்த 29ஆம் திகதி அதிகாலை 2.30 மணியளவில் பெண் ஒருவரை தாக்கிவிட்டு இரண்டு இலட்ச ரூபாய் பணம் மற்றும் 20 பவுண் தங்க நகைகள் என்பன திருடப்பட்டதாக காத்தான்குடி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இச்சம்பவம் தொடர்பாக காத்தான்குடிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவந்த நிலையில் எதிர்பாராத திருப்பமாக திருடப்பட்ட நகைகள் அனைத்தும் திருடப்பட்ட அதே வீட்டு வளவிற்குள் நேற்று மாலை வீசப்பட்டுக் கிடந்ததாக பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து பொலிஸார் நகைகளை மீட்டுள்ளனர்.

சம்பவ தினத்தன்று வீட்டிலிருந்த பெண் மலசலகூடத்துக்குச் செல்ல முற்பட்ட போது வீட்டு வளவிற்குள் மறைந்திருந்த திருடன் மற்றவர்கள் உறக்கத்தில் இருந்த சமயம் அந்தப் பெண்ணை தாக்கிவிட்டு பணத்தையும் நகைகளையும் திருடியதாக முறைப்பாடு பதியப்பட்டிருந்தது.

அதன்பின்னர் தாக்குதலுக்குள்ளான பெண், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மீட்கப்பட்ட நகைகளை தடயவியல் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்

Comments