“தியாகம் என்பது மனோஇச்சைகளைப் பலியிடுவதே” ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் அஸ்மின்



asmin

உலகளாவிய முஸ்லிம் உம்மத்தோடு இணைந்து இலங்கை முஸ்லிம் மக்களும் இன்றைய தினம் ஹஜ் பெருநாளை, தியாகப்பெருநாளை கொண்டாடுகின்றார்கள், அவர்களனைவருக்கும் எனது ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன், ஈத் முபாரக்.
நபி இப்றாஹீம் அவர்களுடைய வாழ்வில் இடம்பெற்ற சவால் மிகு நிகழ்வுகளையும், அதனோடு இணைந்திருக்கும் மனோஇச்சைகளுக்கும் உலக ஆசைகளுக்கும் எதிரான போராட்டத்தின் தொகுப்பாகவே ஹஜ் கடமையின் அம்சங்கள் அமைந்திருப்பதைக் காணுகின்றோம், அதேபோன்றுதான் ஹஜ்ஜுப் பெருநாளும் ஹஜ் வணக்கத்தின் நிறைவை குறித்து நிற்கும் தியாக தினமாகும். இத்தினத்திலே சாதாரண மக்களாகிய நாம் எமது மனோ இச்சைகளைப் பலியிட்டு எமது உள்ளங்களை தூய்மைப்படுத்த உறுதிபூணுதல் சிறப்பானதாகும்.
உலகளாவிய முஸ்லிம் உம்மத் பல்வேறு சவால்களை எதிர்நோக்கியிருக்கின்றது. இஸ்லாம் அமைதியின் மார்க்கம் என்றாலும்; உலகின் பல முஸ்லிம் சமூகங்கள் அச்சத்தில் வாழ்வதை நாம் காணுகின்றோம். இந்த நிலைமை மாறவேண்டும், உலக மக்கள் எல்லோரும் அமைதியான வாழ்வை வாழ் வேண்டும். இதுவே இன்றைய நல்ல தினத்தில் எல்லோரது எதிர்பார்ப்புமாக இருக்கின்றது.
குறிப்பாக வடக்கு முஸ்லிம் மக்கள் தம்முடைய மீள்குடியேற்ற செயற்பாடுகளில் அதீத அக்கறைகாட்டி வருகின்ற இச்சந்தர்ப்பத்தில் சமூக நன்மைக்கான விட்டுக்கொடுப்புகளை செய்வதற்கும் சமூகத்தை ஒரு சீரான பாதையில் வழிநடாத்துகின்ற போக்கினை புரிந்துகொள்வதற்கும் முன்வருதல் மிக மிக அவசியமானதாகும். கடந்த இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாக எம்மைச் சூழ்ந்துகொண்டிருக்கின்ற தடைகள், சவால்கள், அச்சுறுத்தல்கள், இடையூறுகள் எம்மைவிட்டும் களையப்படவேண்டுமாக இருந்தால், இவற்றை வெற்றிகரமாக எதிர்கொள்ளவேண்டுமாக இருந்தால், சமூக ரீதியான உடன்பாடுகள் மிக மிக அவசியமாகும்.
அறியாமையினாலும், அதிகார வேட்கையினாலும் எமது சமூகத்தை நாம் ஒரு தவறான பாதையில் இட்டுச்சென்றுவிடக் கூடாது. எனவே இவ்வாறான ஒரு சிறப்பு மிகுந்த நாளிலே எமது மக்களுக்கான தீர்வினை ஏற்படுத்துவதற்கு எமது மனோஇச்சைகளைத் தியாகம் செய்வதற்கு நாம் எல்லோருமே முன்வரவேண்டும் என்ற கருத்தை இந்த நல்ல நாளிலே உங்களோடு பகிர்ந்துகொள்கின்றேன்.
அனைவருக்கும் ஈத் முபாரக்; புனித ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்..

Comments