CSN நிறுவன கட்டிடம் பறிமுதல்?

சீ.எஸ்.என். தொலைக்காட்சி நிறுவனம் நடாத்தப்பட்டு வரும் பத்தரமுல்லை டென்சில் கொப்பேகடுவ மாவத்தையிலுள்ள ஆறு மாடிக் கட்டிடத்தை, நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு பெற்றுக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்க தகவல் வட்டாரங்கள்  இந்த தகவலை குறிப்பிட்டுள்ளன.

கடந்த செவ்வாய்க் கிழமை நடைபெற்ற நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் சபைக் கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இக்கட்டிடம் அமையப் பெற்றுள்ள 30 பேர்ச் காணி கடந்த 2003 ஆம் ஆண்டு கல்வி நடவடிக்கையொன்றுக்காக என தெரிவித்து காணியின் பெறுமதியில் 0.25 வீத கொடுப்பனவை செலுத்தி நகர அபிவிருத்தி அதிகார சபை பெற்றுள்ளது.

இருப்பினும், இந்த காணி கல்வி நடவடிக்கைக்கு அல்லாது, 2006 ஆம் ஆண்டு முதல் வியாபார நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக பணிப்பாளர் சபைக் கூட்டத்தில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இந்த வகையில், சீ.எஸ்.என். நிறுவனத்தினால் காணியின் பெறுமதியில் 4 வீதமான அளவு நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு கிடைத்திருக்க வேண்டும். இருப்பினும், அதற்குரிய எந்தவொரு பெறுமானமும் கிடைக்கப் பெறாதுள்ளமை தெரியவந்துள்ளது.

இதேவேளை, சீ.எஸ்.என். தொலைக்காட்சி நிறுவனத்தின் கணக்கிலுள்ள 157 மில்லியன் ரூபா மற்றும் நிகழ்ச்சி ஒலி,ஒளிபரப்புக்களுக்கு பயன்படுத்தப்பட்ட நவீன ரக பஸ் வண்டி என்பன நீதிமன்ற உத்தரவின் கீழ் அரசுடமையாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Comments