திருகோணமலையில் 03வயது சிறுமி பாம்பு கடித்து வைத்தியசாலையில்

திருகோணமலை, அத்தாபெந்திவெவ பகுதியில் 03 வயது சிறுமி பாம்பு கடிக்கு இலக்கான நிலையில் இன்று (22) காலை திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளரொருவர் தெரிவித்தார்.

இவ்வாறு பாம்பு கடிக்கு இலக்கான சிறுமி கவினி விஷ்னிகா 03 வயது எனவும் தெரியவருகின்றது.

குறித்த சிறுமியின் தாய் கிணற்றடியில் இருந்த போது தூக்கத்திலிருந்த சிறுமி எழுந்து வெளியில் வந்த போது பாம்பு பாம்பு என கதறியழுததையடுத்து வீட்டுக்கு அருகில் பாம்பு நிற்பதை அவதானித்ததாகவும் தாயார் கூறினார்.

சிறுமி பாம்பு கடிக்கு உள்ளாகி 15 நிமிடமளவில் மயக்கம் ஏற்பட்ட நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்தனர்.

Comments