17 வயது யுவதியின் காதலை பிரிக்க மந்திரவாதியிடம் அழைத்து சென்ற போது, மந்திரவாதி யுவதியை கடத்திச் சென்றார்... இலங்கையில்.
திருக்கோவில் பிரதேசத்தில் பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்றுவரும் 17 வயது யுவதியை, அவரது வீட்டில் வைத்து 40 வயதுடைய மந்திரவாதி ஒருவர் மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்றுள்ளதாக யுவதியின் பெற்றோர் நேற்று வியாழக்கிழமை (27) முறைப்பாடு செய்துள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர்.
இது பற்றி மேலும் தெரிய வருவதாவது,
பிரபல பாடசாலை ஒன்றில் க.பொத. உயர் தரத்தில் கல்வி கற்று வரும் 17 வயதுடைய குறித்த யுவதி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பொத்துவில் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பெற்றோர் யுவதியை கண்டித்து, அக்காதலை பிரிப்பதற்காக மட்டக்களப்பு திமிலைத்தீவிலுள்ள ஒரு மந்திரவாதியிடம் அழைத்துச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில் சிறுமியின் காதலை பிரிப்பதற்கான பரிகாரங்கள் செய்த மந்திரவாதி, சம்பவதினமான நேற்று புதன்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் குறித்த யுவதியின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
யுவதியின் தாயார் சமையல் அறையில் இருந்தபோது சிறுமியை மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்றுள்ளதாகவும், குறித்த மந்திரவாதி 40 வயதுடைய திருமணம் முடித்து விவாகரத்து பெற்றவர் எனவும், சிறுமியை மீட்டுத்தருமாறும் கூறி முறைப்பாடு செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.


Comments
Post a Comment