4 பொதுசந்தை வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்த சுகாதார பரிசோதகர்!

அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் புதன் கிழமை மேற்கொண்ட திடீர் சுற்றி வழைப்பின் போது சுகாதாரமற்ற பல பொருட்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதுடன் உரிமையாளர்களுக்கெதிராக கடும் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டதாக சிரேஷ்ட பொதுச் சுகாதர பரிசோதகர் ஏ.எம்.பௌமி தெரிவித்தார்.

அக்கரைப்பற்று பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பறூஸா நக்பரின் விசேட பணிப்புரைக்கமைய பொதுச் சுகாதார பரிசோதகர்களான ஏ.எம். பௌமி, ஏ.பி.சம்சுதீன், ஏ.எம். ஜெஸீல் உள்ளிட்ட குழுவினரால் இச்சுற்றிவழைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது பாதை ஓரங்களில் பாதுகாப்பற்ற முறையில் உணவுப் பொருட்கள் மற்றும் மரக்கறிவகைகளை விற்பனை செய்து வந்த மூன்று பேர் கண்டறியப்பட்டனர்.

இவ்வாறு சுகாதாரமற்ற முறையில் வற்றாலைக்கிழங்கு, சின்ன வெங்காயம், கருவாடு போன்ற உணவுப் பொருட்களை தரையில் போட்டு விற்பனை செய்து வந்த காரணத்தினால் சுமார் 110 கிலோகிராம் பொருட்கள் கைப்பற்றி அழிக்கப்பட்டதுடன் குறித்த வியாபாரிகளுக்கெதிராக கடுமையான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் தேனீர்கடையொன்றில் சுகாதாரமற்ற முறையில் கொத்து ரொட்டிக்காக வைக்கப்பட்டிருந்த மாப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பற்ற முறையில் கைகளினால் உணவுகள் பறிமாறுதல் மற்றும் உணவுகளை வைத்திருந்த கரணங்களினால் கடை உரிமையாளர்கள் நான்கு பேர் எச்சரிக்கப்பட்டனர்.

Comments