துபாய் எகிப்தியரின் வீட்டில் புகுந்து கைவரிசை காட்டிய 6 இலங்கையர்கள் ...

டுபாயில் அல் மிஷாரில் அமைந்திருக்கும் எகிப்தியரின் வீடு  ஒன்றை அவர்கள் இல்லாத நேரத்தில் உடைத்து அங்கிருந்து 450,000 திர்ஹம் பெறுமதியான கைக்கடிகாரம், தங்க ஆபரணங்கள், கையடக்க தொலைபேசி, டேப்லட், வாசனை திரவியங்கள் போன்ற பொருட்களை திருடியதாக 6 இலங்கையர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் 7ம் திகதி இடம்பெற்றதாக குறிப்பிடப்படும் கொள்ளை  சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று டுபாய் முதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு  எடுத்துக்கொள்ளப்பட்ட போது வழக்கில்  ஆஜரான ஆறு  இலங்கையர்களும் தங்களின் குற்றத்தை ஒப்புக்கொண்டிருப்பதாக நீதிமன்ற வட்டாரங்கள் மூலம் அறியக்கிடைத்தது.

சம்பவம் பற்றி மேலும்  தெரியவருவதாவது, சுற்றுலா விசாவில் தொழில்  வாய்ப்பு  தேடி  ஐக்கிய  அரபு எமிரேட்சிற்கு வந்த ஐந்து நபர்களுடன் ஐக்கிய  அரபு  எமிரேட்சின்  சார்ஜாவில் ஏற்கனவே பணி  புரிந்துகொண்டிருக்கும் ஒருவர்  இணைந்தே இந்த திருட்டு  சம்பவத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள்,

27 வயதுக்கும் 48 வயதுக்கும் இடைப்பட்ட ஆறு  சந்தேக நபர்களும்  இணைந்து வாடகை காரொன்றை அமர்த்தி டுபாயில்  குறிப்பிட்ட பகுதியில்  அமைந்திருக்கும் வீடு ஒன்றிற்கு  சென்றிருக்கிறார்கள்.

 குறிப்பிட்ட 7ம்  திகதி  வீட்டின்  உரிமையாளரான எகிப்தியர் குடும்பம் வீட்டில் இருக்கவில்லை அந்த  சந்தர்ப்பத்தில் ஒருவர் வாகனத்தில்  அமர்ந்திருக்க ஏனைய  ஐவரும் வீட்டினை  உடைத்து குறிப்பிட்ட  பொருட்களை  முப்பதே  நிமிடத்தில் திருடிக்கொண்டு இடத்தை  விட்டு  அகன்றுள்ளனர்.

ஜூலை ஒன்பதாம் திகதி வீடு  திரும்பிய வீட்டு  உரிமையாளர் தனது  வீடு  கொள்ளையிடப்பட்டு  கிடப்பதை  அறிந்து  போலீசில்  செய்த  முறைப்பாட்டுக்கு  அமைய  விசாரணைகளை  மேற்கொண்ட  போலீசார் ஜூலை 17ம் திகதி சந்தேக நபர்களுள் இருவரை சார்ஜாவில்  வைத்து  கைது  செய்திருந்தனர், விசாரணைகளின் போது  இவர்கள்  வழங்கிய  தகவல்களை  அடுத்து  ஏனைய  நால்வரும் டுபாயில் வைத்து  கைது  செய்யப்பட்டனர்,

குற்றவாளிகளை நீதிமன்றத்தில்  ஆஜர் படுத்திய போலீசார் அவர்களுக்கு  எதிராக வழக்கு  விசாரணையையும்  ஆரம்பித்திருந்தனர், அந்த வழக்கின் முதல்  விசாரணை இன்று நீதிமன்றத்தில்  விசாரணைக்கு  வந்தபோது குற்றவாளி கூட்டத்திற்கு தலைமை தாங்கிய நபரால் நீதிபதியிடம்  வாக்கு  மூலம் வழங்கப்பட்டதை  தொடர்ந்து அவர்களின்  குற்றம் ஊர்ஜிதப்படுத்தப்பட்டது.

குற்றவாளிகளுக்கான  தீர்ப்பு  டிசம்பர் 6ம் திகதி  வழங்கப்படும்.

Comments