ஜனாதிபதிக்கான செலவீனங்கள் அதிகரிப்பு!

எதிர்வரும் நிதியாண்டுக்கான முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்டமூலத்தில் அரசின் மொத்த செலவீனத்தில் ஜனாதிபதிக்கான செலவீனங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி ஆகியவற்றுக்கான செலவினங்களும் குறைக்கப்பட்டுள்ளன.

2017ஆம் நிதி ஆண்டுக்கான அரசாங்கத்தின் மொத்த செல­வினம் தொடர்பான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் நேற்று முதலாம் வாசிப்பிற்காக சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

அதில் 2017ஆம் நிதி ஆண்டிற்கான அரசாங்கத்தின் மொத்த செலவினம் ஒரு இலட்சத்து 81 ஆயிரத்து 900 கோடியே 50 இலட்சத்து 44 ஆயிரம் ரூபா என உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இது கடந்த 2016 ஆம் நிதி ஆண்டுக்கான அரசாங்கத்தின் மொத்த செலவினத்துடன் ஒப்பிடுகையில் குறைவாகும்.

ஆனால் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு ஒதுக்கப்பட்ட செலவினங்கள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதிகமாகும். 2016ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி செலவினமாக 239 கோடியே 20 இலட்சத்து 75 ஆயிரம் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில் 2017ஆம் ஆண்டு 406 கோடியே 6 இலட்சத்து 4 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 648 கோடியே 26 இலட்சத்து 79 ஆயிரம் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதேபோன்று பிரதமரின் செலவினங்களாக கடந்த ஆண்டு 48 கோடியே 62 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், இவ்வாண்டு 76 கோடியே 90 இலட்சத்து 71 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 125 கோடியே 52 இலட்சத்து 71 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

Comments