வடக்கில் காட்டும் அக்கறை கிழக்கில் மறுக்கப்படுகிறது- அமைச்சர் ஹக்கீம் பாராளுமன்றில் உருக்கமான உரை !
மக்களின் காணிப் பிரச்சினை குறித்து பாராளுமன்றில் அமைச்சர் ஹக்கீம்
காணி விடுவிப்பு விவகாரத்தில் அரசாங்கத்தால் வடக்கில் காட்டப்படுகின்ற அக்கறை கிழக்கிற்கு மறுக்கப்பட்டு வருகின்றது.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளும் இவ்விடயத்தில் நிறைவேற்றப்படவில்லை.
இவ்வாறு பயணித்தால் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது கடினமானதாகவே அமையும் என்று நீர்வழங்கல் மற்றும் நகரதிட்டமிடல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் நேற்று சபையில் தெரிவித்தார்.
2006 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பற்றைக்காடுகளை பாதுகாத்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலின் பிரதி பலனையே இன்று காணி விவகாரத்தில் பெரும் பிரச்சினையாக அனுபவித்து வருகிறோம் என்று கூறினார்.
பராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை அமர்வின் போது அமைச்சர் ஜோன் அமரதுங்கவினால் முன்வைக்கப்பட்ட காணி கொள்ளுதல் சட்டத்தின் கீழான கட்டளைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு அவர் தொடர்ந்தும் கூறுகையில்;
புதிய அரசியல் யாப்பு ஒன்றை உருவாக்கி அதனை இந்த சபையிலே அங்கீகரித்துக் கொள்வதற்கான சந்தர்ப்பம் நெருங்கி வருகின்ற நிலையில் நாட்டிலுள்ள காணிப்பிரச்சினைகள் தொடர்பிலும் அரசாங்கம் கவனத்தை செலுத்தி வருகின்றது.
தேசிய காணி ஆணைக்குழு ஒன்றை அரசியல் யாப்பில் உள்வாங்கியிருந்தும் அவ்விசாரணைக்குழு ஸ்தாபிக்கப்படாதிருக்கின்றமையே இப்பிரச்சினை நீண்டிருப்பதற்கான பிரதான காரணமாகும்.
நாட்டில் பற்றைக்காடுகளாக அறியப்பட்ட காணிகளை பாதுகாக்கும் பொருட்டு 2006 ஆம் ஆண்டில் வர்த்தமானி அறிவித்தல் ஒன்று பிரகடனம் செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து, வனபரிபாலன சபையானது இவ்வாறான காணிகளை தன்வசப்படுத்திக் கொண்டது.
மேற்படி வர்த்தமானி அறிவித்தலின் பலாபலனையே இன்று நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
காணிப்பிரச்சினை என்பது அம்பாறை மாவட்டத்தில் அதிகரித்து காணப்படுகிறது. வட்ட மடு காணிப்பிரச்சினை பாரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. அதேபோன்று அண்மையில் அஷ்ரப் நகரில் காணிப்பிரச்சினையை முன்னிலைப்படுத்தி போராட்டம் ஒன்றும் நடத்தப்பட்டிருந்தது.
கிழக்கிலே சில பிரதேசங்களில் பொதுமக்களுக்கு சொந்தமான காணிகளை இராணுவத்தினர் ஆக்கிரமித்திருக்கின்றனர்.
இவ்வாக்கிரமிப்புக்கு மத்தியில் அங்கு பெண்களும் பல்வேறு அசெளகரியங்களுடன் வாழ்ந்து வருகின்றனர்.
வலிகாமம் வடக்கில் காணி விடுவிப்பு இடம்பெறுகிறது. இது வரவேற்கக்கூடிய விடயம் அரசாங்கம் என்ற வகையில் இதனை செய்தேயாக வேண்டும். இதற்காக நாம் மகிழ்ச்சியடைவதுடன் அரசாங்கத்துக்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம். எனினும் காணிவிடுவிப்பு விவகாரத்தில் அரசாங்கம் வடக்கில் காட்டுகின்ற அக்கறையை கிழக்கிலும் காட்ட வேண்டும் என்றே வலியுறுத்துகிறோம்.
நாட்டில் பல இடங்களில் மக்களுக்கு சொந்தமான காணிகள் படையினரால் சுவீகரிக்கப்படுகின்றன. பயிர்ச்செய்கையிலும் ஈடுபடுகின்றனர்.
முகாம்கள் அமைக்கப்படுகின்றன.
எனவே பொதுமக்களுக்கு சொந்தமான காணிகளில் அமையப் பெற்றுள்ள முகாம்கள் நீக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்த விரும்புகிறேன்.
முசலி பிரதேசம் இன்று கடற்படைக்கு சொந்தமான முகாம் பிரதேசமாக மாறியிருக்கிறது.
நல்லாட்சியிலும் இவ்வாறு மக்களின் காணிகள் படையினரால் சுவீகரிக்கப்படுவதையும் ஆக்கிரமிக்கப்படுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது. காணி விவகாரத்தில் இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுப்புகள் பொருத்தமற்றவை. மக்களின் வாழ்வாதாரக் காணிகள் அவர்களிடத்தில் ஒப்படைக்கப்படவேண்டும்.


Comments
Post a Comment