ராஜபக்ஷ குடும்பத்துக்கு அரசாங்கம் கொடுத்திருக்கும், சலுகைகள் வேறு யாருக்கும் வழங்கியதில்லை - அஸாத் சாலி

05.10.2016 அன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அஸாத் சாலி தெரிவித்த கருத்துக்கள்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ்வுக்கு எதிராக பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஆனால் இந்த வழக்குகள் அனைத்தும் மிகவும் மந்த நிலையிலேயே இடம்பெறுகின்றன. அத்துடன் கோத்தபாய ராஜபக்ஷ் தொடர்ந்து நீதிமன்றத்துக்கு வருகின்றார். ஆனால் அவர் ஒருபோதும் கைதுசெய்யப்படுவதில்லை.

அதேபோன்று தற்போது அவர் சீனாவில் நடைபெறவுள்ள பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொள்ள செல்வதற்கு கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள நீதி மன்றம் செல்கின்றார். பாதுகாப்பு மாநாட்டில் இவர் கலந்துகொள்வதானது எதிர்காலத்தில் அரசாங்கத்துக்கு பாரிய பிரச்சினையாக அமையக்கூடும். அத்துடன் நாட்டில் பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இருக்கின்ற நிலையில் சீனாவில் நடைபெறும் பாதுகாப்பு மாநாட்டுக்கு கோத்தபாயவுக்கு ஏன் அழைப்பு விடுக்கவேண்டும்?

மேலும் மஹிந்த அரசாங்க காலத்தில் நடைபெற்ற ஊழல்களுக்கு பங்காளராக இருந்த சீன அரசாங்கம் பாதுகாப்பு மாநாட்டுக்கு கோத்தபாயவுக்கு அழைப்பு விடுத்துள்ளமையானது பாரியதொரு சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது . இதன் காரணமாக நாட்டில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அதற்கு அரசாங்கம் பொறுப்பு கூறவேண்டும். எனவேதான் இந்த அரசாங்கத்துக்கும் ராஜபக்ஷ் குடும்பத்துக்கும்  இருக்கும் தொடர்பு என்ன என்பதை நாங்கள் தொடர்ந்து கேட்டு வருகின்றோம். மக்களும் இதுதொடர்பாக கேட்க ஆரம்பித்துள்ளனர்.

ராஜபக்ஷ குடும்பத்துக்கு அரசாங்கம் கொடுத்திருக்கும் சலுகைகள் வேறு யாருக்கும் வழங்கியதில்லை. ராஜபக்ஷ குடும்பத்தினர் எவரேனும் கைதுசெய்யப்பட்டால் அவர்கள் அந்த இடத்தில் இருந்தே வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுவார்கள், பிணையில் விடுதலையாகின்றனர், வெளிநாட்டுக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் இந்த குற்றத்தை வேறு யாரேனும் செய்திருந்தால் அவர்களுக்கு இவ்வாறான சலுகைகள் வழங்கப்படுமா?

மேலும் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஒரு இனவாதியல்ல. அத்துடன் சிறைகளில் இருக்கும் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும் என கூட்டு எதிரணியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்து வருகின்றார். ஆனால் அவரது சகாக்கலான விமல் விரவன்ச மற்றும் உதய கம்மன்பில போன்றவர்கள் விக்னேஸ்வரன் ஒரு இனவாதி என்றும் அரசியல் கைதிகள் என்று யாரும்  இல்லை. அவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என தெரிவித்துவருகின்றனர்.

ஒரே அணி என்று சொல்லக்கூடிய இவர்களுக்குள் ஒரே விடயத்தில் தலைவர் ஒரு நிலைப்பாட்டிலும் சகாக்கள் வேறு நிலைப்பாட்டிலும் இருப்பது இந்த அணியில் மாத்திரம்தான். அத்துடன் நாட்டுக்குள் இனங்களுக்கிடையில் பிரச்சினையை ஏற்படுத்தி ஆட்சியை கைப்பற்றுவதே இவர்களின் நோக்கமாகும். அதற்கான வேலைத்திட்டங்களையே மேற்கொள்கின்றனர்.

அத்துடன் கஷ்மீர் எல்லையில் இந்திய மற்றும் பாகிஸ்தான் இராணுவத்தினர் மேற்கொண்டுவரும் சண்டை காரணமாக அங்கு பாரியளவில் பொதுமக்கள் கொள்ளப்படுகின்றனர். குறிப்பாக சிறுவர்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இந்த படுகொலைகளை நிறுத்த சார்க் நாட்டு தலைவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அத்துடன் அங்கு நடைபெறும் இந்த படுகொலைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்புக்கள் கண்டுகொள்ளாமல் இருக்கின்றன. எமது நாட்டிலும் யுத்தம் நடைபெறும் போது எதனையும் தெரிவிக்காமல் இரு சாராறிலும் பாரியளவு மனித படுகொலைகள் நடைபெற்றதன் பின்னர்தான்    ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்குழு மனித உரிமை மீறல் தொடர்பாக ஆராய ஆரம்பித்தனர்.

அதேபோன்று கஷ்மீர்  எல்லையில் தற்போது நடைபெறும் சண்டை, இந்திய பாகிஸ்தான் நாடுகளுக்கிடையில் யுத்தம் ஏற்பட்டதன் பின்னர்தான் ஐக்கிய நாடுகள் சபை இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கும். அதனால் சார்க் நாட்டு தலைவர்கள் இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவருவதற்கு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தவேண்டும்.

அத்துடன் இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க இது தொடர்பாக இந்திய பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என நாங்கள் எதிர்பாக்கின்றோம்.

Comments