ஆசிரியர்களுக்கு இது சமர்ப்பணம்!

ஆசிரியர்களுடைய பணியின் மதிப்பு அளவிடப்பட முடியாதது. ஏனெனில், ஒரு மனிதனை மனிதன் என்று அடையாளப்படுத்துவது, மிருகங்களை மீறிய சிறப்பு பண்புக்கூறுதான். அந்த சிறப்புப் பண்புக்கூறு சிறந்த கல்வியின் மூலமே கிடைக்கிறது. அந்த சிறந்தக் கல்வியை அளிக்கும் மாபெரும் பணி ஆசிரியர்களை சார்ந்துள்ளது. ஏனெனில், ஆசிரியர்கள் உருவாக்கும் மாணவர் சமூகமானது, ஒரு நாட்டின் எதிர்காலத்தை மட்டுமல்ல, இந்த உலகின் எதிர்காலத்தையே தீர்மானிக்கிறது.

அனைத்து மக்களின் நல்வாழ்வும் அந்த சமூகத்தின் கைகளில்தான் உள்ளது. எனவே, இந்த இடத்தில் ஆசிரியர் என்பவரின் பணியானது, அனைத்தையும்விட உயர்ந்து நிற்கிறது.

மற்ற பணிகளைப்போல ஆசிரியர் பணி என்பது ஒருவரின் வாழ்வாதாரத்திற்கான பணி அல்ல. தனது வாழ்வையே ஆதாரமாக்கும் பணி. அந்தப் பணியில் வேண்டுமானால், வாழ்வை நகர்த்துவதற்கான ஊதியம் கிடைக்கலாம். ஆனால் அந்த ஊதியத்திற்காக அந்தப் பணி அல்ல என்பதுதான் ஒரு சிறந்த ஆசிரியரின் தத்துவம். ஆசிரியர் பணி என்பது ஒரு உயிரோட்டமான பணி. ஆய்வு ரீதியான பணி.

உளவியல் ரீதியான பணி. சேவை ரீதியான பணி. அர்ப்பணிப்புள்ள பணி. கால-நேரமற்ற பணி. ஒரு சிறந்த ஆசிரியர் வகுப்பறைக்குள் மட்டுமே ஆசிரியராக இருப்பதில்லை, இருக்கவும் முடியாது. அவர் தன் வாழ்வின் பெரும்பகுதி நேரங்கள் ஆசிரியராகவே இருக்கிறார். அவரின் சேவைக்கு எல்லை கிடையாது. மனித வாழ்வில் திருப்பு முனையை ஏற்படுத்தி, அதற்கு அர்த்தத்தைக் கொடுக்கும் ஒரு கடமை ஆசிரியருக்கு உள்ளது.

உலகில் உள்ள பணிகளிலேயே, ஆசிரியர் பணியே அதிக திறமைகள் தேவைப்படும் பணி என்று சொல்லும் அளவிற்கு அதன் பொறுப்புகள் அதிகம். எனவே, அந்தப் பணிக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவதை உறுதிசெய்வது அரசின் பிரதான கடமை.

இது ஒரு கதை. ஒரு கவிதையின் உரை வடிவம். இறைவன் ஆசிரியனை உருவாக்கும் முயற்சியில் முனைந்து இருக்கிறான். அது இடைவிடாத ஆறாவது நாள் வேலை அவருக்கு. அவர் முன்னாள் ஒரு தேவதை தோன்றியது. இந்த வடிவை உருவாக்க ,நீங்கள் தேவைக்கும் அதிகமாக நேரத்தை எடுத்து கொள்கிறீர்கள் என தேவதை இறையிடம் முறையிட்டது.

இறைவனை பொறுத்தவரையில், ஆசிரியன், தொழில் நிறைய பொறுப்புகளை உள்ளடக்கியது. அவர் நிறைய இளம் உள்ளங்களை சென்றடைய வேண்டியவர். அந்த நிலையில் இறைவனின் கைகளில் ஒரு செயல் விளக்கம். வேறு என்ன? ஆசிரியர் இந்த கலவையோடு இருக்க வேண்டும் எனும் குறிப்புகள் தான். அதை தேவதையின் கைகளில் கொடுத்த இறைவன், அதை சரிபார்க்க சொன்னார். அவை இப்படி சென்றது..

* ஆசிரியன், அனைவர்க்கும் மேம்பட்டவராய் இருக்க வேண்டும், இத்துடன் மாணவரின் நிலைக்கு இறங்கி வர கூடியவராய் இருக்க வேண்டும்.

* அவர் தான் கற்பிப்பதற்கு சம்பந்தம் இல்லாத நூற்று என்பது விஷயங்களை செய்திட கூடியவராய் இருக்க வேண்டும்.

* முக்கியமான விஷயங்களை தினமும் மாணவ சமூகத்துடன் பகிர்ந்து கொள்ள கூடியவராய், தினமும், சரியான நேரத்தில் இருப்பவராக .

* தனக்கு செலவிடும் நேரத்தை விட அடுத்தவருக்கு அதிகம் செலவழிக்க வல்லவராய்..

* என்றென்றும் தவழும் புன்னகையுடன், பிரச்சனையுடன் வலம் வரும் மாணவரையும், பெற்றோரையும் எதிகொள்ள வல்லவராய் ..

* மற்றவர் தமக்கு துணை நிற்காத தருணத்திலும் தனது பணியை சிறப்புற செய்பவராய், தம் மாணவருக்கு இன்னொறு பெற்றோராய்..

* மூன்று இணை கைகளை கொண்டவராய் இருக்க வேண்டும்..

ஆறு கரங்கள்.. அது முடியாத காரியம் என வியப்பு மேலிட தேவதை கேட்டது,. என்னை பொறுத்தவரையில்,. கைகளை அமைப்பதில் பிரச்சனை ஏதுமில்லை. பிரச்சனை.. மூன்று இணை கண்களை அமைப்பதில் தான் என்றது இறை .. ஒரு சாதாரண உருவாக்கத்தில், ஆறு கண்களா.. தேவதையால் நம்ப முடியவில்லை.

ஒரு இணை கண்கள், ஒரு மாணவனை அவன் எப்படி இருக்கிறானோ அப்படியே அணுகிட.. அடுத்தவர் குத்தும் முத்திரைகளை ஏற்காத பக்குவம்.. அடுத்த இணை கண்கள், எதையும் காணாமல், அந்த மாணவனை பற்றி அறிந்து கொள்ள வழிவகுப்பதாய்.

இந்த கண்கள், தலையின் பின்புறம் அமையும். முன்புறம் உள்ள கண்கள், அவர்களை நோக்கி, நான் உன்னை புரிந்து கொண்டேன், உன் மீது மற்ற எவரையும் விட , என்றென்றும் நம்பிக்கை கொண்டுள்ளேன், உன் மேல் பெரும் மதிப்பு கொண்டுள்ளேன் என ஒரு வார்த்தையும் உரைக்காமல் சொல்ல..

அதற்கு தேவதை இது என் வரையில் பெரிய செயல் வடிவம் போல் தோன்றுகிறது. நீங்கள் ஏன் நாளை தொடர கூடாது என்றது. அதற்கு இறை, அது முடியாது. இங்கு நான், என்னை போல் ஒருவரை உருவாக்கும் முயற்சியில் உள்ளேன். அவர்கள் நோயுற்ற தருணத்திலும் தம் பணியில் இருப்பார். தம் இதயத்தில், தம் மாணவர்க்கு என தனி இடம் கொடுத்து இருப்பார். எந்த மாணவரையும் சீர்தூக்கி பார்க்க கூடியவராய், மாணவர்களின் சிக்கல்களை புரிந்து கொள்ள கூடியவராய் இருப்பார்.

தேவதை அந்த உருவை, அந்த சிற்ப்பத்தை, இன்னும் சற்று அருகே சென்று கண்டது. இது மென் இதயம் பெற்ற உரு இல்லையா என ஆச்சர்யத்துடன் கேட்டது ? அதற்கு இறை ஆம், ஆனால் வலிமையானதும் கூட என பதில் சொன்னது. இந்த ஆசிரியன் எவ்வளவு மன திண்மை கொண்டவன் என உன்னால் அனுமானிக்க முடியாது என்றது.

இந்த உரு சிந்திக்க வல்லதா? ஆம், நிஜம், அத்துடன், சரியான காரணத்துடன், சமாதானம் கொள்ளவும் மிக்கது. அந்த நிலையில் தேவதை, உருவின், கன்னத்தை தொட்ட நிலையில் ஒரு நீர் துளியை கண்டது.

இறையிடம் திரும்பி இதோ ஒரு நீர்கசிவை விட்டு விட்டீர்கள் என்றது. இது நீர்கசிவு அல்ல. இது ஒரு கண்ணீர் துளி என்றது இறை. கண்ணீர் துளி? ஏன்? – இது தேவதை.

இறை நிறைய சிந்தனையுடன் சொன்னது.. இது ஆசிரியருக்கு அடிக்கடி வர கூடியதே. இது ஒரு ஆண்டு முழுவதும் மாணவர்களுடன் இருந்து, அவர்களை வழியனுப்பி விட்டு புது மாணவரை வரவேற்கும் தருணத்தில் அரும்பும். ஒரு சில மாணவர்களை சரிவர அணுக முடியாமல் போன வருத்தத்தில் அரும்பும். அந்த மாணவரின் பெற்றோர் கொள்ளும் இறக்க உணர்வில், அவர்கள் மாணவர்கள் சாதிக்கும் சிறு சிறு விஷயங்களில் பெருமையுடன் கண்ணீர் துளிர்க்கும்,என் மாணவர்கள் புதிய சிகரங்களை, மேன்மையை அடையும் தருணங்களில் துளிர்க்கும் ,என இறை முடித்தது.

ஒரு சமயம் அரிஸ்டாட்டில் தம் மாணவருடன் ஆற்றின் கரைக்கு வந்தார். மாணவர்களை கரையில் நிற்க வைத்தவர், நான் ஆற்றின் அக்கறை வரையில் சென்று ஆற்றில் ஏதாவது சுழல்கள் உள்ளதா என பார்த்து வருகிறேன் என்றார். அவர் ஆயத்தம் கொண்ட சமயம், அவரின் ஒரு மாணவர் தண்ணீரில் நீந்தி செல்வதை கண்டார். மறு கரை வரை சென்று திரும்பிய மாணவர், குருவே, சுழல்கள் இல்லை., நாம் தைரியமாய் ஆற்றை கடக்கலாம் என்றார். அந்த நிலையில், அரிஸ்ட்டாட்டில், உன்னை சுழல்கள் எடுத்து சென்றிருந்தால் என்னவாகி இருக்கும் என்றார். அதற்கு அந்த மாணவன், இந்த அலக்சாண்டர் போனால், ஆயிரம் அலேக்சாண்டர்களை உருவாக்கும் வல்லமை உள்ளவர் நீங்கள். ஆனால் ஒரு அரிதான குருவை இழந்தால் நாங்கள் பரிதவித்து போவோம் என்றான். அப்படி ஆசிரியர் மாணவர் உறவு அமைவது நல்ல சமூகத்துக்கு புது சுவாசத்தை கொணரும்.
இவர்களே போற்றத்தக்கவர்கள்!
————————————————

எது எப்படியிருந்தாலும், சிறந்த அர்ப்பணிப்பு உணர்வுடன், எந்த லாபநோக்கமும் இன்றி, பாடப்புத்தக அறிவு மட்டுமின்றி, பல்துறை பரந்த அறிவை மாணவர்களுக்கு வழங்கி, அவர்களின் உலகை விரியச் செய்து, உத்திரவாதமான எதிர்காலத்தை தொடர்ந்து வழங்கி வரும் ஆசிரியக் கண்மணிகள் கணிசமான அளவில் இருந்து, சமூக முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பாடுபட்டு வருகிறார்கள். கற்றல்-கற்பித்தல் என்பதே அவர்களின் தாரக மந்திரம். இத்தகைய ஆசிரியர்கள், சமூக உருவாக்கத்தின் மூல ஆதாரங்களாக திகழ்கிறார்கள்.

இவர்களைப் போன்றவர்களை போற்றவும், புகழவும், கவுரவிக்கவுமே ஆசிரியர் தினம். என்றென்றும் மாணவர் உலகில் நறுமணம் வீசிட செய்திடும் ஆசிரியர் உலகுக்கு ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.. உங்கள் அரிய பனி தொடரட்டும். நல்வாழ்த்துக்கள்… உலகில் தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்பவர்கள், பிறரால் என்றென்றும் ஞாபகம் கொள்ள படுகிறார்கள்.

Comments