விவாகரத்துக்கு பின்பு பெண்கள்: சிரிக்கிறார்களா?.அழுகிறார்களா?
மனிதர்களின் குணாதிசயங்களில் இருந்து எவை எல்லாம் காணாமல் போயிருக்கின்றன என்று ஒரு பட்டியல் போட்டால் அதில் நிச்சயம் இடம் பெறுபவை, மூன்று!
பொறுமை.
நிதானம்.
சகிப்புத்தன்மை.
இவை இல்லாமல் போனதால்தான், கணவன்–மனைவி இடையே ஏற்படும் எல்லா பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு விவாகரத்துதான் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. விவாகரத்துக்கு மாற்றாக வேறு எதைப்பற்றியும் அவர்கள் சிந்திப்பதில்லை. முறித்துக்கொள்வது மட்டுமே முடிவானது என்று கருதுகிறார்கள். ஆண், பெண் இருவரும் சரிசமம் என்று சொல்லிக் கொண்டு அசுர வேக வளர்ச்சியை காட்டும் இன்றைய தலைமுறையினரிடம் தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் எந்த ஒரு சிக்கலுக்கும் சரியான தீர்வு காணும் பொறுமை இல்லை.
பொறுமையின்றி, நிதான மின்றி அதிரடியும் ஆவேசமுமாக களத்தில் இறங்கி விவாகரத்து வாங்கிவிடுகிறார்கள். ஆனால் விவாகரத்துக்குப் பிறகு வாழும் வாழ்க்கை மிகவும் கொடுமையானது. அதைப் பற்றி யாரும் யோசிப்பது இல்லை. கையில் பணம் இருந்தால் எதையும் சாதித்து விடலாம் என்ற மனோபாவத்தில் விவாகரத்து முடிவு எடுக்கப்படுகிறது. ஆனால் இழந்த எதையும் பணத்தால் வாங்கமுடியாது என்பதை உணரும்போது மிகுந்த மனஉளைச்சலுக்கும், விரக்திக்கும் உள்ளாகிவிடுகிறார்கள்.
தவறுகளே செய்யாத மனிதர்கள் இல்லை. அதை திருத்திக் கொள்ளும் முயற்சி தான் வாழ்க்கை. திருமணத்துக்கு முன்பு செய்யும் தவறுகளுக்காக பெற்றோர் பிள்ளைகளை தூக்கி எறிவது இல்லை. ஆனால் திருமணத்துக்கு பிறகு செய்யும் ஒவ்வொரு தவறுக்கும் கணவன், மனைவி இருவரில் யாராவது ஒருவரை தூக்கி எறியும் முடிவுக்கு இன்னொருவர் வந்துவிடுகிறார். திருமணத்துக்கு முன்பு– திருமணத்துக்கு பின்பு என்று ஒருவருடைய வாழ்க்கையை இரண்டாக பிரித்துப் பார்த்த காலம் போய், இப்போது விவாகரத்துக்கு முன்பு– பின்பு என்று பிரித்துப் பார்க்கிறார்கள்.
அதில் பிந்தைய காலம் அநேகமாக பெண்களுக்கு இருண்ட காலம் ஆகிவிடுகிறது. ஆண்களும் விவாகரத்துக்கு பிறகு அதிகமான மனநெருக்கடிக்கு உள்ளாகி விடுகிறார்கள். இதனால் அவர்களுடைய தொழில் பாதிப்படைகிறது. ‘தன்னைப் பற்றி தனக்கு பின்னால் என்ன பேசிக்கொள்வார்களோ!’ என்ற எண்ணம் அவர்களுடைய நட்பு வட்டாரத்தை குறைக்கிறது அல்லது சிதைக் கிறது. அப்போது, தான் செய்யும் சின்னச் சின்ன தவறுகள் கூட, பெரிய வடிவத்தில் தன் கண்முன்னே வந்து நிற்கும்.
அந்த நேரத்தில் தன்மீதே தனக்கு கோபமும், வருத்தங்களும் ஏற்பட்டு மனஅழுத்தம் எல்லைமீறும். இதனால் காரை வேகமாக ஓட்டி தாறுமாறாக செல்வது, மது அருந்துவது, உறவுகளை புறக்கணிப்பது என்று முரண்பாடான பாதையில் பயணிக்க தொடங்கிவிடுவார்கள். அப்போது அவரது மாண்பும், மரியாதையும் சிறிது சிறிதாக அவருடைய வாழ்க்கையில் இருந்து விடைபெற்று சென்றுகொண்டே இருக்கும். இந்த இழப்பை பணத்தாலும், பதவியாலும் ஈடு செய்ய முடியாது என்பதை உணரும்போது, வாழ்க்கையில் தவறு செய்துவிட்டதை புரிந்துகொள்வார்கள்.
விவாகரத்தில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்! என்னதான் மனதளவில் அவள் தைரியமான பெண்ணாக இருந்தாலும், அவளுடைய சமூக அந்தஸ்து குறைந்து விடும். அதற்கு தக்கபடி அவள் தன் மனதை பக்குவப்படுத்திக்கொள்ளாவிட்டால், மனதளவில் உடைந்து போவாள். அப்போது தனக்கு முன்னால் இருக்கும் உலகம் வேறு, தனக்கு பின்னால் இயங்கும் உலகம் வேறு என்பதை உணர்வாள். உணர்கிறபோது அவர்களுக்குள் இன்னொரு கேள்வி எழும்.
அது, ‘நாம் மற்றவர்களுக்கு பாரமாக இருக்கிறோமோ?’ என்ற கேள்வி! அப்போது விவாகரத்து என்பது தான் எடுத்த தவறான முடிவு என்ற குற்ற உணர்வு தோன்றும். தனது எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற கேள்விக்குறியும் தோன்றும். தன் வயதை ஒத்தவர்கள் வாழும் சந்தோஷ வாழ்க்கையும் கண்களை உறுத்தி, கண்ணீர் வரச்செய்யும். அப்போது அவர்கள் தங்கள் பலத்தை எல்லாம் இழந்து விடுகிறார்கள். சுற்றி இருப்பவர்களிடம் மூர்க்கத்தனமாக நடந்து கொள்கிறார்கள்.
அவர்களது வாழ்க்கையில் தேவையற்ற டென்ஷனும், கோபமுமே மிஞ்சும். மனதில் பரவியிருக்கும் வெறுமை வார்த்தைகளில் வெறுப்பாக வெளிவரும். அது மற்ற வர்களை புண்படுத்தி அவர்களையும் விலகச் செய்யும். கணவன்– மனைவி இடையே தகராறு ஏற்பட்டால், அந்த நேரத்தில் பேச்சை குறைத்துக் கொள்ளவேண்டும். தேவையற்ற பேச்சு பிரச்சினையை அதிகமாக்கும். அமைதியாக தெளிவான சிந்தனையோடு, சிக்கல்களை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். விவாகரத்துக்கு முன் நிறைய யோசிக்க வேண்டும். முக்கியமாக அதற்கு பின்னால் வாழப்போகும் வாழ்க்கையை பற்றி யோசிக்க வேண்டும்.


Comments
Post a Comment