வடக்கு – கிழக்கு ஊடகவியலாளர்கள்  யாழில் போராட்டம்!

வடக்கு- கிழக்கு ஊடகவியலாளர்கள் யாழில் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர்.

தகவலறியும் உரிமை சட்டத்தை உடனடியாக அமுல்படுத்துதல் உள்ளிட்ட மூன்று முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 16ஆவது நினைவுதினம் எதிர்வரும் புதன்கிழமை அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில், குறித்த தினத்திலேயே இப்போராட்டம் இடம்பெறவுள்ளது.

மேலும் இதன்போது, படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் போன ஊடகவியலாளர்கள் தொடர்பில் சர்வதேச ஊடக அமைப்புக்கள் முன்னிலையில் காலதாமதமின்றிய விசாரணை இடம்பெற வேண்டும். ஊடகவியலாளர்கள் தமது பணிகளை சுதந்திரமாக மேற்கொள்வதற்குரிய உரிமையை அனைத்து மட்டங்களிலும் உறுதிப்படுத்தல் ஆகிய கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்னால் எதிர்வரும் புதன்கிழமை காலை 10.30 மணிக்கு இடம்பெறவுள்ள இப்போராட்டத்திற்கு வடக்கு, கிழக்கை சார்ந்த அனைத்து ஊடகவியலாளர்களையும் ஒன்றிணையுமாறும் யாழ்.ஊடக அமையம் கோரிக்கை விடுத்துள்ளது.

Comments