தீயில் கருகிய வர்த்தக நிலையம்: வவுனியாவில் சம்பவம்!
வவுனியா, இராசேந்திரகுளம் பகுதியில் உள்ள இலத்தினியல் வர்த்தக நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான இலத்திரனியல் பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று மதியம் 11.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
வவுனியா – செட்டிகுளம் பிரதான வீதியில் உள்ள இராசேந்திரகுளம் பகுதியில் அமைந்திருந்த ஸ்ரூடியோ ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அவ் வர்த்தக நிலையம் முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளது.
போட்டோ கொப்பி இயந்திரம், புகைப்படக் கருவிகள், பலசரக்கு பொருட்கள் என்பவற்றைக் கொண்டதாக குறித்த வர்த்தக நிலையம் காணப்பட்டது. தீ விபத்து காரணமாக சுமார் ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் முழுமையாக தீயில் எரிந்துள்ளன.
காலையில் கடையை திறந்த அதன் உரிமையாளர் சிறிது நேரத்தின் பின் வர்த்தக நிலையத்தை பூட்டி விட்டு உறவினர் ஒருவரின் மரணச் சடங்குக்கு சென்ற நிலையிலேயே இத்தீ விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வர்த்தக நிலையத்தின் கூரைப் பகுதியில் இருந்த சீற் பாரிய ஓசையுடன் வெடித்து எரிவதைக் கண்ட அயலவர்கள் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் இணைந்து தீயை கட்டுப்படுத்த முனைந்த போதும் பொருட்கள் அனைத்தும் எரிந்து முடிந்த நிலையிலேயே தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
தீ விபத்து மின்சார ஒழுக்கின் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.


Comments
Post a Comment