சித்தியடையாத மாணவர்ளை குறைகூகற வேண்டாம் – ஷிப்லி பாரூக்

முகைதீன் மூத்தோர் சங்கத்தின் ஏற்பாட்டில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்த மாணவர்களுக்கான கௌரவிப்பு மற்றும் பரிசளிப்பு நிகழ்வு நேற்று (23.10.2016) புதிய காத்தான்குடி அன்வர் வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.

முகைதீன் மூத்தோர் சங்க தலைவர் C.M.M. அப்துல் காதர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாரூக், வைத்தியர் N. ஆரிப், காத்தான்குடி பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் S. சிவநாயகம், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளர் U.L.M.N. முபீன் (BA), காத்தான்குடி நகர சபையின் முன்னாள் தவிசாளர் A.L. மர்சூக் அஹமட் லெப்பை, காத்தான்குடி இளைஞசர் காங்கிரஸ் அமைப்பாளர் இல்மி அஹமட் லெப்பை மற்றும் இம்முறை தரம் 5 புலமைபரிசில் பரீட்சை எழுதிய மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வுகளில் கௌரவ அதிதிகளுள் ஒருவராக கலந்துகொண்டு உரையாற்றிய போதே கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாரூக் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்

புலமைப்பரிசில் பரீட்சை என்பது பிள்ளைகளின் வாழ்க்கையினை தீர்மானிக்கின்ற ஒரு பரீட்சை கிடையாது. க.பொ.த. சாதாரண தரம், உயர்தரம் போன்ற பல்வேறு பரீட்சைகளுக்கு இம்மமாணவர்கள் முகம் கொடுக்க வேண்டியுள்ளது. எனவே இப்பொழுதே அவர்கள் தோற்று விட்டார்கள் என்று கருதி அவர்களை குறை கூறி சிறார்களின் உள்ளங்களை நோவினை செய்யாமல் எதிர்காலத்தில் கல்வியில் சிறந்த ஒழுக்கமுள்ள ஒரு பிள்ளையாக உருவாவதற்கு பெற்றோர்களாகிய நீங்கள் மார்க்கத்துடன் இணைந்த கல்வி வழிகாட்டுதல்களை அவர்களுக்கு வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதன்போது தரம் 5 புலமைபரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவித்து அவர்களுக்கான நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ்களையும்  ஷிப்லி பாரூக் வழங்கி வைத்தார்.

Comments