அமைச்சரின் சமையல்காரருக்கு கலாச்சார நிதியத்தில் இருந்து சம்பளம்

கலாச்சார அலுவல்கள் அமைச்சர், மத்திய கலாச்சார நிதியத்தில் இருந்து அவரது சமையல்காரருக்கு சம்பளம் கொடுக்கின்றார் என தொழிற்சங்க பிரதிநிதிகள் குற்றம் சுமத்தியுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நிலை குறித்து தொழிற்சங்க பிரதிநிதிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமும் அறிவித்துள்ளார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைச்சின் நிதிகளை குறித்த அமைச்சர் இவ்வாறு தவறாக பயன்படுத்துகின்றார் என தொழிற்சங்க பிரதிநிதிகள் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளனர்.

குறித்த சமையல்காரருக்கு ரூபா 50,000 பணம் செலுத்த அவரிடம் கையொப்பம் வாங்குவதற்காக மத்திய கலாச்சார நிதியத்தின் பதிவக அலுவலர் அமைச்சரின் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன் குறித்த அமைச்சர், கலாச்சார நிதி கொள்கைகளுக்கு மாறாக மற்றுமொரு நபரை நியமித்து சம்பளம் மற்றும் மற்றைய சலுகைகளை மேற்கொண்டு வருகின்றார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும்,அமைச்சரவை ஒப்புதல் இன்றி 63 வயதுடைய நபர் ஒருவரை நிதி பணிப்பாளர் பதவிக்கு அமைச்சர் நியமித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தில், நிதி பணிப்பாளர் சட்டவிரோதமாக உதவி நிதி பணிப்பாளராக பெண் ஒருவரை நியமித்துள்ளார் என்றும், தொழிற்சங்கங்கள் நிதி பணிப்பாளர், சட்டவிரோதமாக முறையில் பலரை வேலைக்கு அமர்த்தியுள்ளார் எனவும் தொழிற்சங்க பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை,கடந்த ஆட்சி அதிகாரிகள் மூலமும் மத்திய கலாச்சார நிதியத்தில் இருந்து கோடிக்கணக்கான பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இது குறித்து முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிற்சங்கம் குற்றச்சாட்டுகள் தொடர்பில் மத்திய கலாச்சார நிதியத்தின் நிர்வாக பணிப்பாளர் காமினி லெனோராவிடம் தொடர்பு கொண்ட போது, இது குறித்து எதனையும் தெரிக்க மறுத்ததுடன், மத்தியகலாச்சார நிதியத்தின் பணிப்பாளரின் ஒப்புதல் இல்லாமல் எதையும் செய்ய முடியாது என குறிப்பிட்டுள்ளாதாக தொழிற்சங்க பிரதிநிதிகள் கூறியுள்ளனர்.

Comments