நல்லாட்சி அரசாங்கம் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண விரிவான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றது – மன்சூர்

நல்லாட்சி அரசாங்கம் இந்நாட்டில் பல தசாப்த காலமாக நீடித்து வரும் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கும், சகவாழ்வு மற்றும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்குமான நடவடிக்கைகளை விரிவான அடிப்படையில் முன்னெடுத்து வருகின்ற இவ்வேளையில் மஹிந்த அணியினர் அதனை குழப்பி பெரும்பான்மையின மக்கள் மத்தியில் இனவாதத்தை தூண்டிவருகின்றனர் என்பதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான எம்.ஐ.எம். மன்சூர் தெரிவித்தார்.

சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்ட 51 கிராம சேவை அலுவலகர் பிரிவுகளில் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள 90 குடும்பங்களுக்கு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு சீமெந்து பக்கெட்டுகள் இலவசமாக பகிர்ந்தளிக்கும் நிகழ்வு நேற்று மாலை(29)சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் இடம்பெற்றபோது அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையிலே – அரசாங்கம் பல்வேறு நிதிநெருக்கடியிலும் கூட மக்களின் வீடமைப்பு அபிவிருத்திக்கென வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் ஊடாக பல்வேறு வேலைத்திட்டங்களை நாடு முழுவதிலும் முன்னெடுத்துள்ளதுடன் அவ்வுதவிகளை பெற்றுக் கொண்டு மக்கள் ஒவ்வொருவரும் உழைப்பாளிகளான மாற வேண்டும்.

.இன்று நாம் எல்லோரும் ஆரோக்கியமற்ற ஒரு சூழலினை வரவழைத்துக் கொண்டுள்ளோம். உணவை நஞ்சாக மாற்றிக் கொண்டுள்ளோம். தொற்றாநோய்களினால் நாளுக்குநாள் மனிதன் மரணித்துக்கொண்டிருக்கின்றான்.

இவைகளிலிருந்து பாதுகாப்புக் பெற நாம் அனைவரும் எமது சூழலில் மரங்களை நாட்டி இயற்கையைப் பாதுகாப்பதோடு, இயற்கையான வீட்டுத் தோட்டத்தினை செய்கை பண்ணுவதன் மூலம் எமது குடும்பத்தின் போசாக்குக்கும் நாட்டின் வறுமையை இல்லாதொழிப்பதற்கும் தீர்க்கமான பங்களிப்பாக அது இருக்கும்.

கடந்த எட்டு வருடகாலமாக சம்மாந்துறைக்கான பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் இன்மையால் பல்வேறு துறைகளில் சம்மாந்துறை மண் அபிவிருத்தியில் பின்னடைந்து காணப்படுகின்றது. அதனை அபிவிருத்தியில் செழிப்புள்ள நகரமாக மாற்றுவதே எனது தலையாய பணியாகும். அதற்கு அரசியல் வேறுபாடுகளின்றி அணைவரும் என்னோடு இணைய வேண்டும்.

குடும்பம் ஒன்றுக்கு 10சீமெந்துப் பக்கெட்டுகள் படி சுமார் 9இலட்சம் ரூபாய் பெறுமதியான 900பக்கெட்டுக்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளர்களான சட்டத்தரணி ஏ.எல்.ஜௌபீர், யு.எல். பஸீர், வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் உயர் அதிகாரிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்கள்.

Comments