யாழ் இளைஞர்கள் கொலை செய்யப்பட்டார்கள்

யாழ்ப்பாணம், கொக்குவில் – குளப்பிட்டி சந்தியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்து தொடர்பாக பல முன்னுக்குப் பின்னான தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.

இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றிருந்தது.

யாழ். பல்கலைக்கழக கலைப்பீடத்தில் 3 ஆம் வருடத்தில் கல்வி கற்கும் கிளிநொச்சியைச் சேர்ந்த நடராசா கஜன் (23) மற்றும் சுன்னாகத்தைச் சேர்ந்த பவுண்ராஜ் சுலக்ஸன் (24) ஆகிய மாணவர்கள் குறித்த விபத்து சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து, வீதியின் அருகில் இருந்த மதிலொன்றுடன் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது மோட்டர் சைக்கிளை ஓட்டிச் சென்ற மாணவனின் கையின் ஊடாக துப்பாக்கி குண்டு துளைத்து கொண்டு சென்றுள்ளதாக வெளியாகிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் குழப்பம் நிலையேற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், கொலை குற்றவாளிகளை கைதுசெய்யும் வரை குறித்த மாணவர்களின் சடலத்தை வைத்தியசாலையில் இருந்து வெளியில் கொண்டு செல்ல தாம் அனுமதிக்கபோவதில்லையென மாணவர்கள் ஆவேசத்துடன் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் வைத்தியசாலைக்கு சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவுடன் மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாகவும், உண்மைகள் வெகுவிரைவில் வெளிக்கொணரப்படும் எனவும் அது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த விபத்தினை யாழ். நீதிமன்ற நீதவான் எஸ்.சதிஸ்கரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.


Comments