புல்மோட்டையில் அமைந்துள்ள கனிய மணல் கூட்டுத்தாபனம் தொடர்பில் பொய்கள் பரப்பப்படுகின்றன -அமைச்சர் றிசாத்

புல்மோட்டையில் அமைந்துள்ள கனிய மணல் கூட்டுத்தாபனத்தின் வருமானத்தை அதிகரித்து ஊழியர்கள் நன்மையடையும் வகையில் எடுக்கப்படும் முயற்சிகளை பிழையாக எடுத்து காட்டும் சக்திகள் கனிய மணல் கூட்டுத்தாபனம் எனது அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டதிலிருந்து பல்வேறுபட்ட பொய்களை பரப்பி வருவதாக கைத்தொழில், வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் நேற்று(2016-10-20) கூறினார்.

கனிய மணல் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் அமைச்சருக்கும் இடையில் இடம் பெற்ற சந்திப்பின் போது அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார்..

ஒரு நிறுவனத்தின் அபிவிருத்தியிலேயே அதனது தொழிலாளர்களின் எதிர்காலம் இருக்கின்றது. பாரம்பரிய முறையில் இன்றைய காலத்தில் பணிகளை செய்ய முற்பட்டால் ஒரு போதும் நிறுவனங்கள் வளர்ச்சி காணாது.காலத்திற்கு ஏற்ற வளர்ச்சி மற்றும் அதனுடன் கூடிய தொழிற் நுட்ப புகுதல் என்பன மிக முக்கியமானதாக இருக்க வேண்டும்.

இதே வேளை சந்தையில் போட்டித்தன்மை ஏற்படுகின்ற போது அதற்கு முகம் கொடுக்கும் வகையில் எமது உற்பத்திகள் இருக்க வேண்டும்.மூலப் பொருளை நாம் ஏற்றுமதி செய்கின்றோம்.அதனது முடிவு பொருட்களை இறக்குமதி செய்கின்ற நிலையில் இருந்து மாறி அந்த முடிவுப்பொருட்களை நாமே இங்கு உருவாக்கி அதனை விற்பதன் மூலம் மேலும் லாபத்தை அடைய வேண்டும்.

அதனை செய்ய முற்படுகின்ற போது தமது நிறுவனத்தின் வளர்ச்சியினை தாங்கிக் கொள்ளமுடியாத சில அதிகாரிகள்,உங்களைப் போன்றவர்களுக்கு பிழையான தகவல்களை வழங்கி எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபடச் செய்ய முனைகின்றனர்.

நான் இந்த அமைச்சினை பொறுப்பேற்றதன் பின்னர் நஷ்டத்தில் இயங்கிய இது பொன்ற நிறுவனங்களை லாபமீட்டும் நிறுவனமாக மாற்றியுள்ளேன்.குறிப்பாக புல்மோட்டை கனியவளக் கூட்டுத்தாபனமும் அந்த நிலைக்கு வந்துள்ளது.

எந்தவொரு அரச நிறுவனத்தையும் விற்கும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை..அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைகள் நன்கு திட்டமிடப்பட்ட முறையில் முன்னெடுக்க வேண்டியது அரச அதிகாரிகளின் கடமையாகும். அதனைவிடுத்து நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயற்படுவது தொடர்பில் அதிகாரிகள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.

Comments