முஸ்லிம் காங்கிரஸின் முன்மொழிவுகள் இஸ்லாமிய அடிப்படைகளுக்கு முரணானதா..? உலமாக்கள் விளக்கம் தர வேண்டும்

ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் உத்தேச தேர்தல்முறை மாற்றத்திற்கான முன்மொழிவுகளில் சேர்க்கப்பட்டுள்ள இரண்டு விடயங்கள் தொடர்பாக உலமாக்கள் தங்களது வழிகாட்டலை வழங்க வேண்டியது கட்டாய கடமையாக தற்போது அக்கட்சியின் ஆதரவாளர்களால் உணரப்படுகிறது.

முஸ்லீம் காங்கிரஸின் முன்மொழிவுகளில் உலமாக்கள் ஏன் தலையிட வேண்டும் என்ற கேள்வி இங்கு எழுவதென்பது இயல்பானதே.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் யாப்பின் அத்தியாயம்-01 இன் உறுப்புரை 1.3 ஆனது கட்சியின் வழிகாட்டல்கள் எனும் தலைப்பில் பின்வருமாறு ஏற்பாடுசெய்கிறது.

“புனித குர்ஆனும் புனித இறை தூதரின் பாரம்பரியங்களும் கட்சியின் அதியுயர் வழிகாட்டல்களாக அமையும்”

புனித அல்குர்ஆனும் இறை தூதரின் பாரம்பரியங்களும் அதியுயர் வழிகாட்டல்களாக உள்ள கட்சியின் முன்மொழிவுகள் அவற்றுக்கு மாற்றமாக அமைந்திருந்தால் அதனை சுட்டிக்காட்டி திருத்த வேண்டியது விடயமறிந்த உலமாக்களின் கடமையல்லவா..?

இம்முன்மொழிவுகளில் பெண்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை அதிகப்படுத்த அதீதமான அக்கறைகொண்டு ஏனைய தேசியக் கட்சிகள்கூட முன்மொழியாத விடயங்கள் இரண்டை முஸ்லீம் காங்கிரஸ் முன்மொழிந்திருக்கிறது.

01. முஸ்லிம் காங்கிரஸின் முன்மொழிவுகளில் விஷேட ஏற்பாடுகள் என்ற தலைப்பில் 15 ஆவது விடயம்

“தேசியப் பட்டியலில் இரு வேட்பாளர்களில் ஒருவர் பெண் வேட்பாளராக கட்டாயப்படுத்தப்படல் வேண்டும்” என குறிப்பிடுகிறது.

இதன் மூலம் முன்மொழியப்பட்ட 33 தேசியப்பட்டியல் உறுப்புரிமைகளில் குறைந்தபட்சம் 16 பேரை பெண்களாக நியமிக்க கட்டாயப்படுத்துகிறது.

அதுமட்டுமல்லாமல் அம்முன்மொழிவின் 10ஆவது விடயம்

“தேசியப் பட்டியல் ஏற்கனவே தரவரிசைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். தேர்தல் பெறுபேறுகளுக்கு பிற்பாடு தரவரிசை மாற்ற முடியாது”

என வரிசையில் மாற்றம் செய்து பெண்களை நியமிப்பதினின்றும் விலகிட முடியாதவாறு கட்டாயமாக இருவரில் ஒரு தேசியப் பட்டியல் பிரதிநிதி பெண்ணாகவே இருந்தாக வேண்டும் என கட்டாயப்படுத்துகிறது.

02. 17 ஆவது முன்மொழிவாக

“ஒரு தேர்தல் மாவட்டத்தினுல் 4 அல்லது அதற்கு மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடும் ஒவ்வொரு அரசியற் கட்சியும் அத்தேர்தல் மாவட்டத்தினுள் ஒவ்வொரு 3 ஆண் வேட்பாளர்களுக்கு 1 பெண் வேட்பாளரை குறைந்த பட்சம் வேட்பாளர்களாக நிறுத்த வேண்டும்”

என, முன்மொழியப்பட்ட 194 தொகுதிகளில் அதிகபட்சமாக 43 பெண் வேட்பாளர்களை நிறுத்த கட்டாயப்படுத்துகிறது.

இவ்வாறு அரசியல் செயற்பாடுகளில் பெண்களின் பிரசன்னத்தினை ஊக்குவிப்பதென்பதும், அல்லது அரசியல் தலைமைத்துவங்களாக பெண்கள் வருவதை ஊக்குவிப்பதென்பதும் புனித அல்குர்ஆனும் இறை தூதரின் பாரம்பரியங்களும் வழிகாட்டி நிற்கின்ற விடயங்களா என்பதை உலமாக்கள் விளக்க வேண்டும்.

குறிப்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, இலங்கை தப்லீக் ஜமாஅத், ஜமாஅதே இஸ்லாமி, தௌஹீத் ஜமாஅத் ஆகிய இஸ்லாமிய வழிகாட்டலுக்கான அமைப்புக்கள் இந்த விடயத்தில் இலங்கை வாழ் முஸ்லீம்களுக்கு வழிகாட்ட முன்வந்து செயற்படவேண்டும்.

Comments