இலங்கையில் முதல் முஸ்லிம் பெண் பொலிஸ் லைலா பஃக்கீரின் அனுபவங்கள். i
“பொலிஸ் பிரிவில் நியமனம் கிடைத்து பயிற்சியும் பெற்று தொழில் துவங்கிய ஆரம்ப காலத்தில், பொதுவில் பெண்கள் பயப்படும் ஓரிடத்திற்கு, ‘பெண்கள் புதிய ஆட்கள்’ என்றெல்லாம் பாராமல், என்னையும் - இன்னொரு பெண் பொலிஸையும் இரவு நேரத்தில் காவல் காக்க, ஓ.ஐ.ஸி பெரியார் கட்டளைப் பிறப்பித்தார். “கடமை” என வந்துவிட்டால், போய்த்தானே ஆகவேண்டும்! அங்கே போனோம் காவல் காத்தோம். அது… எந்த இடம் தெரியுமா?”
“அது – கொழும்பில் கேரி கொலேஜ்ஜுக்குப் பக்கத்திலுள்ள, கொழும்பு பெரிய ஆஸ்பத்திரியின் சவச்சாலை பிரேதங்களை வைத்திருக்கும் அறை ‘மோச்சரி ரூம்’. இளம் பெண்களான எமக்கு எப்படி இருந்திருக்கும்?
”கலாபூஷணம்
எஸ்.ஐ. நாகூர்கனி -
“நானொரு முஸ்லிம். அல்லாஹ் நம்மோடு இருக்கிறான் - ஏன் பயப்பட வேண்டும்? என்ற துணிவில், அருள்மறை அல்குர்ஆனை எடுத்துக் கொண்டு, தினமும் - இரவு கடமைக்கு ‘மோச்சரி ரூமை’ காவல் புரிய சென்றேன்…. இது என் வாழ்வில் மறக்க இயலாத சம்பவம் அனுபவம்” எனத் தன் தொழிற்கால அனுபவங்களை இரைமீட்டி, மகிழ்ச்சி கலந்த நெகிழ்ச்சியை நம்மோடு பகிர்ந்து கொள்ளும்
இவர் யார்?இவர்தான்…
இலங்கையின் முதல் முஸ்லிம் பெண் பொலிஸாக (கான்ஸ்டபிள்) 1953ல் நியமனம் பெற்று, 27 வருடங்கள் சேவையாற்றி, 1980ல் ஓய்வுபெற்ற ஜனாபா லைலா பஃக்கீர் என்பவராவார்.
இந்நாட்டில் பொலிஸ் பிரிவு ஆரம்பிக்கப்பட்டு, 150 வருட நிறைவு விழா (1866 – 2016) அண்மையில் கொண்டாடப்பட்டமை யாவரும் அறிந்ததே.
‘இந்தப் பொலிஸில் நம் முஸ்லிம்களின் பங்களிப்பு – அதாவது வகிபாகம் எத்தகையது?’ இதனை அறியும் ஆவலில் தகவல்களை தேடும் பணியில் ஈடுபடலானேன். அப்போது கடந்த செப்டம்பர் மாதம் 04ஆம் தேதிய “லங்கா தீப”வின் ஞாயிறு இதழை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தேடிப் போன முயல் காலில் வந்து சிக்கிய மகிழ்வில், மேற்படி இதழின் பக்கங்களைப் புரட்டினேன். அதில் “லைலா”வின் கதை இருந்தது. ஆம்… இதுவும் இன்னொரு “லைலா – மஜ்னு” கதைதான்!
அது என்ன “லைலா – மஜ்னு” கதை என்கிறீர்களா?
உலகக் காவியமான “லைலா – மஜ்னு” கதையில், லைலா மீது அவளது காதலன் கயாஸ் வரம்புமீறி விருப்பம் கொண்ட காதல் சித்தரிக்கப்பட்டுள்ளதை வாசித்தோம். நமது பொலிஸ் வரலாற்றில் தன் சமூகத்தில் எந்தவொரு பெண்ணும் பொலிஸ் வேலைக்கு முன்வராத நிலையில், தான் செய்து வந்த ஆசிரிய வேலையையும் உதறிவிட்டு, முதன் முதல் பொலிஸ் வேலையை விரும்பி ஏற்ற காதல் கதை கண்முன்னே நடைபெற்றிருக்கிறது. ‘அளவு கடந்து விரும்பிய’ கோணத்தில், இரண்டு கதைகளுமே நமக்கு “லைலா – மஜ்னு”தான் லைலாவின் கதைதான்
நமது லைலாவின் கதைதான் என்ன? இதோ அந்தக் கதை…
நம் நாட்டில் பொலிஸ் பிரிவு கடந்த 03.09.1866ல் தான் ஆரம்பிக்கப்பட்டது. கடந்த செப்டம்பர் 03ம் திகதியுடன் 150 வருடங்கள் நிறைவுறுகின்றன. நிறைவு விழா கொண்டாடினோம்.
சுதந்திரத்திற்கு முன் ஆரம்பமான பொலிஸ் பிரிவு, அப்போதெல்லாம் வெள்ளையர் கையிலேயே இருந்து வந்தது. 1946ல் தான் - அதாவது 80 வருடங்களுக்குப் பின்னர் தான் முதல் இலங்கையர் ஒருவர் பொலிஸ் அதிகாரியாக நியமனம் பெற்றார். அவர்தான் ரிச்சர்ட் அலுவிஹார என்பவர்.
ரிச்சர்ட் அலுவிஹார என்பவரே, 1952ல் பெண்களையும் பொலிஸ் பிரிவில் இணைத்துக் கொள்ளும் திட்டத்தைப் பிரேரித்தார். இத்திட்டம் நன்கு அலசி ஆராயப்பட்டு 1953ல் அமுலுக்கு வந்தது.
பிரஸ்தாப திட்டத்தின் அமுலாக்க முயற்சியில், முதலில் பத்திரிகைகளில் “பொலிஸ் பிரிவில் பெண்களும் இணைய ஆட்சேர்ப்பு” விளம்பரம் செய்யப்பட்டது. விளம்பரத்தின் விளைவாய் வந்த விண்ணப்பங்களில் நால்வர் மட்டுமே பொருத்தமானவர்களாக நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டு தெரிவு செய்யப்பட்டனர்.
அந்நால்வரில் இரண்டாம் இலக்கம் தரப்பட்டு தெரிவு செய்யப்பட்டவர் ஒரு முஸ்லிம் பெண். அவர்தான் லைலா பஃக்கீர் ஆவார். மற்ற மூவரும் ஹேமா குணவர்தன ஜெனிட்டா பெரேரா லெனோரல் என்பவர்களாவர்.
மாத்தறை மாவட்டம் வெலிகமையில் 22.02.1930ல் சம்சுதீன் பஃக்கீர் - சுன்ஜீர் என்ற மலே தம்பதியருக்கு ஒரே மகளாகப் பிறந்தவர்தான் லைலா பஃக்கீர். இப்போது இவருக்கு வயது 87 ஆகும்.
இவரது தந்தை சம்சுதீன் பஃக்கீரும் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் என்பதால், இவர்களது குடும்பம் பெரும்பாலும் தலைநகர் கொழும்பிலே இருக்க வேண்டி ஏற்பட்டது.
அதனால் லைலா கொழும்பிலேயே – மருதானை ஆனந்தாக் கல்லூரியிலே படிக்கலானார். அப்போதெல்லாம் ஆனந்தாக் கல்லூரி ஒரு கலவன் பாடசாலை என்பது குறிப்பிடத்தக்கது. பாடசாலை வாழ்க்கையில் இவர் சுறுசுறுப்பான விளையாட்டு வீராங்கனையாகவும், வலைப்பந்தாட்ட அணியில் விளையாடும் வீராங்கனையாகவும் திகழ்ந்தார். 1949ல் பாடசாலை வாழ்க்கை முடிந்தது.
வாப்பாவுக்கு ஒரே பிள்ளை (மகளாகிய) லைலாவை ஓர் ஆசிரியையாக ஆக்கவே பெரிதும் விருப்பம் இருந்தது. தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றவே, லைலாவும் விரும்பினார்.
அதன்படி ஆசிரியைக்கான நியமனம் எளிதில் கிடைத்தது. முதல் நியமனம் மாத்தளை கொன்வென்ட் ஒன்றுக்கு கிடைத்தது. ஆங்கிலம் படிப்பித்தார். மாணவியர் மீது கொள்ளைப் பிரியம் லைலாவுக்கு. நன்கு படிப்பித்து, நல்ல பெறுபேற்றினையும் பெற்றுக் காட்டினார்.
சக ஆசிரியைகளான ஹேமா குணவர்தன லைலாவின் நெருங்கிய தோழியானார். ஒரு நாள் ஒரு பேப்பரை காட்டி, அதில் வெளியான விளம்பரமொன்றை வாசிக்கும்படி கூறினார்.
லைலாவும் அவ்விளம்பரத்தை வாசித்தார். அது பொலிஸ் பிரிவுக்கு பெண்களை இணைத்துக் கொள்ளும் ஆட்சேர்ப்புக்கான விளம்பரம். “இருவரும் இதற்கு விண்ணப்பிப்போம். நமக்கெல்லாம் பதில் வராது. வந்தால் பார்ப்போம்” என ஹேமா அன்புடன் நச்சரிக்கவே, தனது தந்தையும் (சம்சுதீன் பஃக்கீர்) ஒரு பொலிஸ்காரர் என்பதால், பொலிஸ் தொழிலில் ஆசை ஏற்பட்டு, தோழி ஹேமாவும், லைலாவும் விண்ணப்பித்தனர்.
என்ன ஆச்சரியம்…? ஓரிரு வாரங்களில் பதில் நேர்முகப் பரீட்சைக்கு வரும்படி அழைப்பாக வந்தது. லைலாவும், தோழி ஹேமா குணவர்தனவும் நேர்முகப் பரீட்சைக்குப் போனார்கள்.
அக்காலத்தில் களுத்துறையில் பொலிஸ் பயிற்சி பாடசாலை இருக்கவில்லை. பம்பலப்பிட்டியிலுள்ள டிப்போ பொலிஸில்தான் நேர்முகப் பரீட்சை நடந்தது. அங்குதான் தோழியர் இருவரும் போனார்கள். அங்கே இளைஞர்களும் அதிகமாக நேர்முகப் பரீட்சைக்காக வந்திருந்தனர். இந்தக் கூட்டத்தில் நாங்கள் இருவரும் தெரிவுசெய்யப்பட மாட்டோம் என்றே லைலா எண்ணினார். ஆனால், அல்லாஹ்வின் நாட்டப்படி இரு தோழியரும் தெரிவாகினர்.
பொலிஸ் நியமனம் கிடைக்கும்போது லைலாவுக்கு வயது 23.
லைலாவுக்கு பொலிஸ் உத்தியோகம் கிடைத்த அதே காலப்பிரிவில் தந்தை சம்சுதீன் வபாத்தானார். தந்தையின் விருப்பமோ மகள் ஆசிரியையாக பணி தொடர வேண்டும் என்பதே அவர் தன் மகள் பொலிஸாக வர வேண்டும் என விரும்ப மாட்டார். அல்லாஹ்வின் நாட்டம் போல், மகள் பொலிஸாக நியமனம் பெற, பொலிஸ்காரரான சம்சுதீன் வபாத்தானார்.
பயிற்சி ஆறு மாதம் நடந்தது. முதலில் முதலுதவி - தட்டச்சு முறை – முறைப்பாடு பதிவு, ஊர்வல ஒழுங்கு – போக்குவரத்து ஒழுங்குமுறை, பொலிஸின் நீதி, சட்டம் என்பன தொடர்பாக பயிற்சி தரப்பட்டது. குறிபார்த்து சுடும் கலையிலும் பயிற்சி தரப்பட்டது. லைலா எல்லாவற்றிலும் தேர்ச்சி அடைந்து சித்திபெற்றார்.
பயிற்சிக் காலம் முடிய, கடமையில் ஈடுபடுத்தினர். மருதானை, நாரஹேன்பிட்டி, வெலிகட, கோட்டை போன்ற இடங்களின் பொலிஸ் நிலையங்களில் லைலா தன் கடமைகளில் நேர்மையாக நடந்து, பெரிய அதிகாரிகளிடம் நன்மதிப்பு பெற்றார். தட்டச்சு வேலை இவருக்கு நேர்த்தியான பணியானது.
பொலிஸ் பணி இந்தச் சகோதரிக்கு மகிழ்ச்சியையே தந்தது. இப்போது இருப்பது போல, அளவுக்கதிகமான வீதி விபத்துக்கள் - போதை வஸ்து பாவனையினால் ஏற்படும் குற்றங்கள் - சிறுவர், பெண்கள் துஷ்பிரயோகங்கள் போன்ற பாரிய குற்றச்செயல்கள் அன்றிருக்கவில்லை. பெண் பொலிஸாகிய எமக்கு நல்ல மதிப்பும் - மரியாதையும் இருந்தது.
பொலிஸ் சேவையில் 27 வருடங்கள் கடமை புரிந்து, 1980 இல் ஒய்வு பெற்ற சகோதரி லைலாவுக்கு, கடந்த 36 வருடங்களாக ஓய்வூதியம் கிடைத்து வருகின்றது. பொலிஸில் சேர்ந்தபோது, கிடைத்த முதல் மாத சம்பளம் 140 ரூபாவே என்பதில் அவர் முகம் மலர்கிறது.
பசுமையான தன் பொலிஸ் நினைவுகளுடனே ராஜகிரியவில் அமைதியாக இப்போதும் வாழ்ந்து வருகிறார் லைலா பஃக்கீர். இவருடன் தெரிவான மற்ற மூன்று பெண் பொலிஸாரும் மறைந்த நிலையில், சகோதரி லைலா மட்டுமே இறையருளால் இப்போதும் வாழ்ந்து வருகிறார். நாமும் அவரை வாழ்த்துவோம்.


Comments
Post a Comment