பயங்கரவாத தடைச்சட்டமே பொலிஸாரின் சித்திரவதைகளுக்கு காரணம்!

இலங்கையில் பொலிஸார் மோசமான சித்திரவதைகளை மேற்கொண்டு வருவதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதற்கு பயங்கரவாத தடைச்சட்டமே காரணமென ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இடம்பெறும் சித்திரவதைகள் தொடர்பாக, எதிர்வரும் 7ஆம் திகதிமுதல் ஒரு மாத காலத்திற்கு சித்திரவதைகளுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் குழு ஆராயவுள்ளது.

குறித்த அமர்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே இலங்கை மனித உரிமை ஆணைக்குழு மேற்குறித்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த காலத்தில் சித்திரவதைகள் தொடர்பாக ஒவ்வொரு பிரதேச பொலிஸ் நிலையங்களுக்கும் கிடைத்த முறைப்பாடுகள் தொடர்பாக சுட்டிக்காட்டியுள்ள மனித உரிமை ஆணைக்குழு, சமூகத்தில் வறிய நிலையில் வாழும் மக்களே அதிகளவில் சித்திரவதைக்கு உள்ளாகுவதாகவும், பொலிஸாரின் தனிப்பட்ட பழிவாங்கலுக்காகவும் சித்திரவதைகள் தொடர்வதாகவும் குறிப்பிட்டுள்ளது.

விசாரணைகளின்போது மாத்திரமன்றி கைதுசெய்யப்படும் போதும் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவதாக மனித உரிமை ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படுபவர்கள் தொடர்பில் பின்பற்றவேண்டிய நடைமுறைகள் குறித்து மனித உரிமை ஆணைக்குழு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ள போதிலும், தமக்கு கிடைக்கும் முறைப்பாடுகளை நோக்கும்போது அவை பின்பற்றப்படுவதில்லை என்பதையே சுட்டிக்காட்டுவதாக மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, அறிவிக்கப்படாத தடுப்பு முகாம்கள் மற்றும் இரகசிய முகாம்கள் குறித்தும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதென சித்திரவதைகளுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் குழுவிற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Comments