இனப்பிரச்சினை நாட்டை ஆபத்தில் தள்ளும்!

நாட்டின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு வழங்கப்படாமல் இழுத்தடிப்பு செய்யப்படுமாயின், அது இந்த நாட்டை ஆபத்தில் தள்ளும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

கல்வியியல் கல்லூரியை பூர்த்திசெய்து வெளி மாவட்டங்களுக்கு ஆசிரிய நியமனம் வழங்கப்பட்ட கிழக்கு மாகாணத்தினை சேர்ந்த 310 பேருக்கும் கிழக்கு மாகாணத்தில் உள்ள மூன்று மாவட்டங்களிலும் உள்ள பாடசாலைகளிலும் நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி மண்டபத்தில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி. தண்டாயுதபாணி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இங்கு உரையாற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சர்,

பாரிய அழிவுகளைச் சந்தித்த இந்த நாடு, அதிலிருந்து பாடம் கற்று இனப்பிரச்சினைக்கான தீர்வை நோக்கிப் பயணிக்காவிட்டால், இந்த நாட்டின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகும்.

ஆகவே, எந்தவித தாமதமும் இல்லாமல் இனப்பிரச்சினைக்கான தீர்வு எட்டப்பட்டு அது அமுல்படுத்தப்பட வேண்டும். 13ஆவது அரசியல் சட்டத்திருத்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாதவர்களாக இந்த நாட்டில் எவரும் இருக்கமுடியாது.

அதேவேளை, இந்த மாகாண சபையை முன்னர் நிர்வகித்தவர்களின் அசமந்தப் போக்கே ஆசிரியர்களை மேலும் சிரமப்பட வைத்தது.

தற்போது கடந்த ஒரு வருடகாலமாக நாம் தொடராக மேற்கொண்ட போராட்டத்தின் வெற்றியைக் கொண்டு இன்று உங்களை கிழக்கு மாகாணத்திலேயே கிட்டிய இடங்களில் நியமித்திருக்கின்றோம்.

எமது நிர்வாகக் காலத்திலே இந்த மாகாணத்தில் ஆசிரியர் பற்றாக்குறை இல்லாது நிவர்த்தி செய்வதற்குரிய அனைத்து முயற்சிகளையும் எடுத்து துரிதமாகச் செயற்பட்டு வருகின்றோம்.

கடந்த கால மாகாண சபை ஆட்சியாளர்களால் விடப்பட்ட நிர்வாகத் தவறுகள் எமது தோள்களை அழுத்தியுள்ளன.

பட்டதாரி ஆசிரியர் நியமனங்களை பரீட்சைகளின்றி வழங்கவும் நாம் உரிய ஒழுங்களைச் செய்துள்ளளோம். கிழக்கு மாகாண எதிர்கால சந்ததியின் கல்வி, ஆசிரியர்களாகிய உங்கள் கைளிலேயே உள்ளன.

எனவே, உங்கள் கடமைகளை சிறப்பாகச் செய்து இந்த மாகாணத்தை கல்வியில் முன்னேற்ற உதவுங்கள்´ என்றார்.

Comments