“குப்பைகள் சேகரிக்கும் வேலைத்திட்டம் வெற்றி”

நாடெங்கிலுமுள்ள மாநகரசபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் வகைப்படுத்தப்பட்ட குப்பைகள் சேகரிக்கும் வேலைத்திட்டம் வெற்றியளித்துள்ளதாக மாநகர சபைகளின் ஆணையாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கேட்போர் கூடத்தில் மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபாவின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. வகைப்படுத்தப்பட்ட குப்பைகள் சேகரிக்கும் வேலைத்திட்டம் தொடர்பான கலந்துரையாடலில் அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி, மாநாகரசபைகளின் ஆணையாளர்கள், முப்படைகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அமைச்சர் பைசர் முஸ்தபாவின்  திட்டத்துக்கமைய நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் மாநகரசபை எல்லைப்பகுதிகளில்  வகைப்படுத்தப்பட்ட குப்பைகளை மாத்திரம் சேகரிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. நகர சூழலுக்கு குவியும் குப்பைகளின் அளவை குறைத்தல் மற்றும் உக்காத குப்பைகளை மீள் சுழற்சி செய்தல் இதன் நோக்கமாகும். அதனடிப்படையில் உக்கும், உக்காத என தரம் பிரிக்கப்பட்ட குப்பைகள் சேகரிக்கும் புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்பு அனைத்து மாநகரசபை பிரதேசங்களிலும் குப்பைகளின் அளவில் குறைவு ஏற்பட்டுள்ளது அத்துடன் பொலித்தீன் மற்றம் பிளாஸ்டிக் குப்பைகளை மீள் சுழற்சி செய்யும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது என அணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

புதிய முறையில் குப்பைகள் சேகரிப்பதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பிலும் மாநகரசபை ஆணையாளர்கள் கலந்துரையாடினார்கள். குப்பைகள் சேகரிக்கும் ஊழியர்கள் பற்றாக்குறை பற்றியும் குப்பைகள் சேகரிக்கும் வாகனங்களின் எண்ணிக்கையின் குறைவு பற்றியும் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டன. மற்றும் மதத்தலங்கள், அதி உயர் வீட்டுத்திட்டங்களில் குப்பைகள் வகைப்படுத்தப்படாது அகற்றப்படுவது பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

இந்த பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் குப்பைகள் சேகரிக்கும் ஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் இணைத்துக்கொள்ளவும்  மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ஊடாக குப்பைகள் சேகரிக்கும் வாகனங்கள் பெற்றுக்கொடுக்கவும் அமைச்சர் பைஸர் முஸ்தபா இதன்போது ஆலோசனை தெரிவித்துள்ளார்.

Comments