அமைச்சர் ஹக்கீம், பிரதி அமைச்சர் ஹரீஸ் அம்பாறை மீனவ சங்க பிரதிநிதிகளுடன் சந்திப்பு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ மற்றும் அம்பாறை மாவட்ட ஆழ்கடல் இயந்திரப்படகு மீனவர் சங்க பிரதிநிதிகளுக்குமிடையில் சந்திப்பு நேற்று முன்தினம் (26) சனிக்கிழமை கல்முனை மாநகர சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதன்போது குறித்த சங்கத்தின் தலைவர் எம்.எஸ்.ஏ.நசீர் ஒலுவில் துறைமுகத்தின் படகுப் பாதை மூடப்பட்டுள்ளதால் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து சுட்டிக்காட்டினார்.
அத்தோடு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸின் சொந்த நிதி ஒதுக்கீட்டில் வெகோ இயந்திரம் மூலம் குறித்த மண்ணை அகற்றும் பணி உடனடியாக முன்னெடுக்கப்பட்டது.

இருந்தபோதிலும் மண் அகற்றப்பட்டு சில நிமிடங்களுக்குள் மீண்டும் மண் வார்க்கப்படுவதால் குறித்த முயற்சி கைகூடவில்லை, அவரின் இம்முயற்சிக்கு மீனவர்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவிக்கின்றேன். மேலும் இம்மண்ணை அகற்றுவதற்கு பாரிய இயந்திரங்களை உபயோகிக்க வேண்டியுள்ளதாகவும் இதன்போது தெரிவித்தார்.

இதன்போது அமைச்சர் றவூப் ஹக்கீம் கருத்துத் தெரிவிக்கையில்,
மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் மண் அகற்றும் இயந்திரத்தின் மூலம் ஒலுவில் துறைமுக படகுப் பாதை நுழைவாயிலில் நிரம்பியுள்ள மண்ணை அகற்றுவதற்கு கடற்றொலில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர இணக்கம் தெரிவித்துள்ளார்.

கடற்றொலில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தாபன பணிப்பாளர் ஆகியோருடன் மேற்படி பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடியதன் பயனான இந்த இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இலங்கiயில் குறித்த மண் அகற்றும் பணிக்கு ஏற்ற வகையிலான இரண்டு இயந்திரங்கள் மாத்திரம் காணப்படுவதாகவும், அதில் ஒன்று தொடர்ச்சியாக கிருந்த பிரதேசத்தில் வேலை செய்வதாகவும் மற்றைய இயந்திரம் ஹிக்கடுவ கடல் பிரதேசத்தில் கரை தட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஹிக்கடுவ பிரதேசத்திலுள்ள இயந்திரத்தை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அளவில் ஒலுவில் துறைமுகத்திற்கு கொண்டு வந்து மண் அகற்றும் பணியினை முன்னெடுக்க கடற்றொலில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளார்.

ஒலுவில் துறைமுக படகுப் பாதை நுழைவாயிலில் நிரம்பியுள்ள மண்ணை அகற்றும் குறித்த நிறுவனத்திற்கான செலவீனங்களை அமைச்சர் றவூப் ஹக்கீம் பொறுப்பேற்பதாகவும் இதன்போது தெரிவித்தார்.

Comments